தேடுதல்

Vatican News
திருப்பீடம்-வியட்நாம் பணிக்குழு திருப்பீடம்-வியட்நாம் பணிக்குழு 

திருப்பீடம்-வியட்நாம் பணிக்குழுவின் அறிக்கை

வியட்நாமில் பாப்பிறை பிரதிநிதியின் அலுவலகத்தை, எவ்வளவு விரைவில் திறக்க முடியுமோ, அவ்வளவு விரைவில் திறப்பது என்று, திருப்பீடம்-வியட்நாம் பணிக்குழுவின் கூட்டத்தில் உறுதி கூறப்பட்டது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

திருப்பீடம் மற்றும், வியட்நாமின் பிரதிநிதிகள் பணிக்குழு, வத்திக்கானில் நடத்திய இரண்டு நாள்கள் கூட்டத்தின் இறுதியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட்21, இப்புதன், ஆகஸ்ட் 22, இவ்வியாழன் ஆகிய இரு நாள்களில் கூட்டம் நடத்திய இக்குழு வெளியிட்ட அறிக்கையில், இவ்விரு நாடுகளுக்கு இடையே நிலவும் உறவுகள், வியட்நாமில் கத்தோலிக்கத் திருஅவையின் நிலைப்பாடு, வியட்நாமில் பாப்பிறை பிரதிநிதியின் அலுவலகம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள், அக்கூட்டத்தில் இடம்பெற்றன என்று கூறப்பட்டுள்ளது.

திருப்பீட பிரதிநிதிகள் குழுவுக்கு, திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் நேரடிப் பொதுச் செயலர் அருள்திரு அந்துவான் கமிலேரி அவர்களும், வியட்நாம் குழுவுக்கு, அந்நாட்டு வெளியுறவுத் துறையின் துணை அமைச்சர் To Anh Dung அவர்களும், தலைமைவகித்து, இக்கலந்துரையாடலை நடத்தினர்.

வியட்நாமிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே உறவுகளை மேலும் ஊக்குவிப்பது பற்றியும், இவ்விரு நாடுகளும், நம்பிக்கை மற்றும், நன்மதிப்பின் அடிப்படையில், கலந்துரையாடல்களைத் தொடர்வது, உயர்மட்ட அளவில், இவ்விரு நாடுகளின் தலைவர்கள் சந்திப்பை ஊக்குவிப்பது போன்றவை இக்கூட்டத்தில் இடம்பெற்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பீடம் மற்றும், வியட்நாம் நாடுகளின் பிரதிநிதிகள் பணிக்குழு, ஏழாவது முறையாக, 2018ம் ஆண்டு டிசம்பரில், வியட்நாம் தலைநகர் ஹனோயில் கூட்டம் நடத்தியது.

24 August 2019, 13:45