தேடுதல்

Vatican News
மடகாஸ்கரில் திருத்தூதுப்பயண தயாரிப்பு மடகாஸ்கரில் திருத்தூதுப்பயண தயாரிப்பு 

ஆப்ரிக்காவில் திருத்தந்தை - நம்பிக்கையின் அடையாளம்

மடகாஸ்கர், காடுகள் அழிவு மற்றும், வறட்சியை மட்டுமன்றி, அரசியல் பிரச்சனையாலும் நிறைந்துள்ளது. இத்தீவு நாட்டில், கத்தோலிக்கர், ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதியினர். இங்கு, திருத்தந்தை ஓர் ஏழைத் திருஅவையைக் காண்பார்

மேரி தெரேசா- வத்திக்கான் செய்திகள்

வருகிற வாரத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மொசாம்பிக், மடகாஸ்கர் மற்றும், மொரீஷியஸ் நாடுகளில் மேற்கொள்ளும் திருத்தூதுப்பயணங்களில், அமைதி, படைப்பைப் பாதுகாத்தல், சந்திப்பு கலாச்சாரங்கள் போன்ற தலைப்புகள், முக்கியத்துவம் பெறும் என்று, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறினார்.

செப்டம்பர் 4, வருகிற புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் 31வது வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணம் குறித்து, வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த, கர்தினால் பரோலின் அவர்கள், மிகுந்த எதிர்பார்ப்புடன் நோக்கப்படும் இப்பயணத்தில், திருத்தந்தை, அமைதி மற்றும், கலந்துரையாடலை அதிகமாக வலியுறுத்துவார் என்று   கூறினார்.

ஆப்ரிக்காவை சிலர், போர்கள், தொற்றுநோய்கள் போன்ற பிரச்சனைகளோடு தொடர்படுத்தி பேசினாலும், இவற்றையெல்லாம் கடந்து, ஆப்ரிக்கா, மனிதப்பண்பு, நல்ல விழுமியங்கள், ஆழ்ந்த விசுவாசம் ஆகியவை, வளமையாக நிறைந்திருக்கும் ஒரு பூமி என்றும் தெரிவித்தார், கர்தினால் பரோலின்.

இத்தகைய உணர்வுகளுடனேயே, திருத்தந்தை அந்நாடுகளுக்குச் செல்கிறார் என்று கருதுவதாகத் தெரிவித்த கர்தினால் பரோலின் அவர்கள், அமைதி, படைப்பைப் பாதுகாத்தல், சந்திப்பு கலாச்சாரங்கள் போன்ற தலைப்புகளில், திருத்தந்தை தனது கருத்துக்களை ஆழமாகப் பதிவுசெய்யும்போது, இவையனைத்தும், நம்பிக்கையின் அடிப்படையில் இடம்பெற வேண்டும் என்று கூறுவார் எனவும் தெரிவித்தார்.

ஆப்ரிக்கா, ஒருங்கிணைந்த முன்னேற்றத்தின் பரிசோதனைக்கூடம் போன்றது என்று, புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் கூறியதைப் பயன்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், ஆப்ரிக்கா, வருங்காலத்தை நம்பிக்கையோடு எதிர்நோக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவார் என்றும், கர்தினால் பரோலின் அவர்கள் கூறினார்.

மொசாம்பிக் அரசும், தற்போது முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கின்ற, முன்னாள் ரெனாமோ புரட்சியாளர்களும், 2018ம் ஆண்டு ஆகஸ்டில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து அந்நாடு, புதியதொரு பக்கத்தைத் திறந்துள்ளது என்றும், கர்தினால் பரோலின் அவர்கள் கூறினார்.

31 August 2019, 15:48