தேடுதல்

Vatican News
கர்தினால் பெர்னான்டோ பிலோனி கர்தினால் பெர்னான்டோ பிலோனி  

சித்ரவதைக்குள்ளாகும் கண்களில் விசுவாசத்தைக் காண்கிறேன்

முதல் கிறிஸ்தவ மறைசாட்சி புனித ஸ்தேவான் அவர்களின் புனிதப்பொருள்கள், கி.பி.415ம் ஆண்டில், அற்புதமாக கண்டுபிடிக்கப்பட்டன. இந்த நிகழ்வை, வெனிஸ் மாநிலத்திலுள்ள, Concordia Sagittaria பேராலயம், ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 3ம் தேதி சிறப்பித்து வருகின்றது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

இன்றும் உலகில், திருஅவையின் பயணம், மாறைசாட்சியம் மற்றும் சித்ரவதைகளால் குறிக்கப்பட்டுள்ளது, பழமையான கிறிஸ்தவ மரபுகளைக் கொண்டிருக்கும் நாடுகளிலும்கூட, திருஅவை காழ்ப்புணர்வை எதிர்கொள்கின்றது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இத்தாலியின் Concordia Sagittaria என்ற ஊரில், திருஅவையின் முதல் மறைசாட்சி புனித ஸ்தேவான் பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய, நற்செய்தி அறிவிப்பு பேராயத் தலைவர் கர்தினால் பெர்னான்டோ பிலோனி அவர்கள், இக்காலத்தில், இணையதளங்கள், முகநூல், இன்ஸ்டகிராம் போன்ற சமுதாய ஊடகங்களிலும் மனித ஆன்மாவின் மோசமான நிலை இடம்பெறுகின்றது என்று கூறினார்.

புனித ஸ்தேவான் பற்றி மறையுரையில் எடுத்துரைத்த கர்தினால் பிலோனி அவர்கள்,  அப்புனிதர், கிறிஸ்துவைப் பின்பற்றி, தனது ஆன்மாவை இறைவனின் கரங்களில் அர்ப்பணித்து, தன்னை சித்ரவரை செய்தவர்களுக்காக, இறைவனிடம் மன்னிப்பை இறைஞ்சினார் எனவும் கூறினார்.

கிறிஸ்துவுக்காக சித்ரவதைக்குள்ளாகும் கிறிஸ்தவர்களின் கண்களில், வெறுப்பை அல்ல, விசுவாசத்தையே காண்கிறேன் என்றுரைத்த கர்தினால் பிலோனி அவர்கள், ஈராக்கில், 2014ம் ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் ஐ.எஸ். இஸ்லாமியத் தீவிரவாதிகளால் விரட்டப்பட்ட கிறிஸ்தவர்கள், யஜிதி இனத்தவர், காக்கி இனத்தவர் போன்றோரை நினைத்துப் பார்க்கிறேன் என்று கூறினார்.

முதல் கிறிஸ்தவ மறைசாட்சி புனித ஸ்தேவான் அவர்களின் புனிதப்பொருள்களை, கி.பி.415ம் ஆண்டில், Kefar Gambaவின் அருள்பணி Luciano என்பவர் அற்புதமாக கண்டுபிடித்தார். இந்த நிகழ்வை, வெனிஸ் மாநிலத்திலுள்ள, Concordia Sagittaria பேராலயம், ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 3ம் தேதி சிறப்பித்து வருகின்றது. (Fides)

05 August 2019, 15:32