ஏமன் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிறார் ஏமன் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிறார் 

வன்முறை, இறப்புக்களிலிருந்து, சிறார் காக்கப்பட வேண்டும்

எண்ணற்ற சிறாரும், இளையோரும், படிப்பை கைவிட்டு, சுரங்கங்களில் வேலைசெய்வது, படைப்பிரிவில் இணைவது போன்றவற்றுக்கான அடிப்படை காரணங்கள் கண்டறியப்பட வேண்டும்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

போர்க்களங்கள், மற்றும் கனிமவளச் சுரங்கங்களில் கடினமாக வேலைசெய்யும் சிறார், அவ்விடங்களிலிருந்து மீட்கப்பட்டு, சமுதாய நீரோட்டத்தில், அவர்கள் மீண்டும் இணைக்கப்பட, உலக சமுதாயம் நடவடிக்கை எடுக்குமாறு, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா.வில் அழைப்பு விடுத்துள்ளார்.  

‘சிறாரும், ஆயுத மோதல்களும்’ என்ற தலைப்பில், ஐ.நா. பாதுகாப்பு அவையில், ஆகஸ்ட் 02, இவ்வெள்ளியன்று நடைபெற்ற கலந்துரையாடலில், திருப்பீடத்தின் பிரதிநிதியாக, உரையாற்றிய, பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், இவ்வாறு கூறினார்.

ஆப்ரிக்காவில், எண்ணற்ற சிறாரும், இளையோரும், படிப்பை கைவிட்டு, கனிமவளச் சுரங்கங்களில் வேலைசெய்வது, படைப்பிரிவில் இணைவது போன்றவற்றுக்கான அடிப்படை காரணங்கள் கண்டறியப்பட்டு, அக்குறைகள் நிவர்த்தி செய்யப்படுமாறும் வலியுறுத்திய பேராயர், சிறார் படைவீரர் மீட்கப்படுவதற்கு, மேலும் முயற்சிகள் அவசியம் என்றும் கூறினார்.

உலகில் போர்கள் இடம்பெறும் பகுதிகளில், இலட்சக்கணக்கான மக்கள், குறிப்பாக, சிறார், தங்களின் அடிப்படை தேவைகளைப் பெற இயலாமல் உள்ளனர் என்றும், நீண்டகாலமாக போர்கள் இடம்பெறும் பகுதிகளில், பள்ளிகள், மருத்துவ மையங்கள், மற்றும், குடியிருப்புகள், குறிவைத்து தாக்கப்படுகின்றன என்றும், பேராயர் அவுசா அவர்கள் கவலை தெரிவித்தார்.

சுரங்களிலும், படைப்பிரிவுகளிலும் வேலைசெய்யும் சிறாரின் மாண்பு மதிக்கப்படுவதில்லை என்று குறை கூறிய, ஐ.நா. தலைமையகத்தில் திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றும், பேராயர் அவுசா அவர்கள், இச்சிறார், வன்முறை மற்றும் மரணங்களிலிருந்து காக்கப்படுமாறு அழைப்பு விடுத்தார்.

உலகினர் கண்களுக்கு மறைந்தும், உலகினரால் மறக்கப்பட்டும் இருக்கின்ற இந்த சிறார் மறுவாழ்வு பெறுவதற்கு, உலக சமுதாயத்தின் மனசான்றைத் தட்டியெழுப்ப உதவுவதாக, இந்த கலந்துரையாடல் அமைய வேண்டும் என்றும், பேராயர் அவுசா அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 August 2019, 15:44