தேடுதல்

Bambino Gesù மருத்துவமனையில் புரிந்துணர்வு ஒப்புந்தம் கையெழுத்திடப்படுகிறது Bambino Gesù மருத்துவமனையில் புரிந்துணர்வு ஒப்புந்தம் கையெழுத்திடப்படுகிறது 

வத்திக்கான், இரஷ்ய சிறார் மருத்துவமனைகள் இணைந்து செயல்பட..

மாஸ்கோவிலுள்ள Morozov சிறார் மருத்துவமனை மற்றும், மாஸ்கோ நரம்பியல் சிகிச்சை மற்றும் ஆய்வுப் பணியாளர்களுக்கு, வத்திக்கானின் குழந்தை இயேசு மருத்துவமனை, ஏற்கனவே சிறப்புப் பயிற்சிகளை அளித்து வருகிறது

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

மருத்துவப் பராமரிப்பு மற்றும் அறிவியல் ஆய்வுகள் துறைகளில், திருப்பீடத்திற்கும், இரஷ்ய கூட்டமைப்புக்கும் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில், வத்திக்கானின் “Bambino Gesù” குழந்தை இயேசு மருத்துவமனையும், இரஷ்ய கூட்டமைப்பின் நலவாழ்வு அமைச்சகமும், “புரிந்துணர்வு ஒப்புந்தம்” ஒன்றில், ஜூலை 4, இவ்வியாழனன்று கையெழுத்திட்டுள்ளன.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரஷ்ய அரசுத்தலைவர் விளாடிமிர் புடின் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்த அதே நாளில், திருப்பீடம், இந்த “புரிந்துணர்வு ஒப்புந்தம்” குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

திருப்பீடச் செயலகத்தின் பொது விவகாரத் துறை பொறுப்பாளர், அருள்பணி பவ்லோ போர்ஜியா அவர்களும், இரஷ்ய கூட்டமைப்பின் நலவாழ்வு அமைச்சர் Veronika Skvortsova அவர்களும், உரோம் குழந்தை இயேசு மருத்துவமனையின் தலைமையகத்தில், இவ்வியாழன் மாலையில் கையெழுத்திட்டனர்.

இதற்குப் பின்னர், குழந்தை இயேசு மருத்துவமனையின் தலைவர் மரியெல்லா எனோக் அவர்கள், இரஷ்ய கூட்டமைப்பின் நலவாழ்வு அமைச்சர், மற்றும் அவரோடு சென்றிருந்த பிரதிநிதிகள் குழுவை வழிநடத்தி, அந்த மருத்துவமனையின் ஆய்வுக் கூடங்களைச் சுற்றிக்காட்டினார். அங்கு இடம்பெறும், மரபணு ஆய்வு மற்றும், இரத்த புற்றுநோய் சிகிச்சைக்காக நடைபெறும் திசு குறித்த ஆய்வுகள் பற்றியும், எனோக் அவர்கள், இரஷ்ய பிரதிநிதிகள் குழுவிடம் விளக்கினார்.

மாஸ்கோவிலுள்ள Morozov சிறார் மருத்துவமனை மற்றும், மாஸ்கோ நரம்பியல் சிகிச்சை மற்றும் ஆய்வு மையப் பணியாளர்களுக்கு,  நரம்பியல் மற்றும், நரம்பு சார்ந்த அறுவைச் சிகிச்சையிலும், வலிப்பு நோய் பற்றி கண்டறிவது மற்றும் அந்நோயால் பாதிக்கப்படும் சிறாருக்குச் சிகிச்சை வழங்குவது பற்றிய திட்டங்களிலும், வத்திக்கானின் குழந்தை இயேசு மருத்துவமனை, ஏற்கனவே சிறப்புப் பயிற்சிகளை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 July 2019, 15:12