தேடுதல்

Vatican News
நொத்ரு தாம் பேராலயத்தில் சீரமைப்புப் பணிகள் நொத்ரு தாம் பேராலயத்தில் சீரமைப்புப் பணிகள்  (AFP or licensors)

நொத்ரு தாம் பேராலயம் ஒரு வழிபாட்டுத் தலம் என்றுணர்ந்து...

தீ விபத்திற்கு உள்ளான புகழ்பெற்ற நொத்ரு தாம் பேராலயத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும், அவ்வாலயம், மக்களின் வழிபாட்டுத் தலம் என்பதை மனதில் கொண்டு செயலாற்ற வேண்டும் – திருப்பீடப் பிரதிநிதி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாரிஸ் மாநகரில், தீ விபத்திற்கு உள்ளான நொத்ரு தாம் பேராலயம் மீண்டும் கட்டியெழுப்பப்படும் வேளையில், அவ்வாலயம், அனைத்திற்கும் மேலாக, ஒரு வழிபாட்டுத் தலம் என்ற முதல் குறிக்கோளை மனதில் கொண்டு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா.அவையின் கூட்டம் ஒன்றில் கூறினார்.

ஐ.நா.வின் அறிவியல், கல்வி, கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய பாதுகாப்புக் கழகம், ஜூன் 30ம் தேதி முதல், ஜூலை 10 இப்புதன் முடிய நடத்திய ஒரு கூட்டத்தில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகக் கலந்துகொண்ட அருள்பணி Francesco Follo அவர்கள், பாரம்பரியக் கருவூலமாகக் கருதப்படும் நொத்ரு தாம் பேராலயத்தின் மறுகட்டமைப்பு பணிகள் குறித்து தன் கருத்துக்களைப் பதிவு செய்தார்.

இவ்வாண்டு, ஏப்ரல் 15ம் தேதி, தீ விபத்திற்கு உள்ளான நொத்ரு தாம் பேராலயத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும், அவ்வாலயம், மக்களின் வழிபாட்டுத் தலம் என்பதை மனதில் கொண்டு செயலாற்ற வேண்டும் என்று அருள்பணி Follo அவர்கள், விண்ணப்பித்தார்.

பேராலயத்தின் மறு கட்டமைப்பில், புதிய திட்டங்கள் புகுத்தப்படும் என்றும், அதன் கூரைப்பகுதியில் மாற்றங்கள் கொணரப்படும் என்றும் பிரெஞ்சு அரசும் ஏனைய நிறுவனங்களும் அறிவித்துள்ளதையடுத்து, அருள்பணி Follo அவர்கள், தன் விண்ணப்பத்தை யுனெஸ்கோ கூட்டத்தில் விடுத்தார்.

நொத்ரு தாம் பேராலயம் தீவிபத்திற்கு உள்ளானதும், பல செல்வந்தர்கள் அதன் மறு கட்டமைப்பு பணிக்கு 10 கோடி டாலர்களுக்கும் மேலாகத் தருவதாக கூறியிருந்தாலும், இதுவரை, அவர்கள் வாக்களித்த தொகையில், 10 விழுக்காடு மட்டுமே வந்து சேர்ந்துள்ளது என்று, பாரிஸ் உயர் மறைமாவட்ட பேராயர் Michel Aupetit அவர்கள், அண்மையில், செய்தியாளர்களிடம் கூறினார்.

11 July 2019, 16:03