தேடுதல்

Vatican News
அமேசான் பகுதியில் செபக்கூட்டத்தில் ஈடுபட்டுள்ள கத்தோலிக்க விசுவாசிகள் அமேசான் பகுதியில் செபக்கூட்டத்தில் ஈடுபட்டுள்ள கத்தோலிக்க விசுவாசிகள் 

அமேசானில் வர்த்தக உலகின் படையெடுப்பு, திருஅவைக்கு சவால்

நல்ல சமாரியரைப்போல், திருஅவையும், காயப்பட்டிருக்கும் அமேசான் பகுதியில் இரக்கத்தோடும், நீதியோடும் தன் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கருணையால் உந்தப்பட்டு செயல்களில் இறங்கிய நல்ல சமாரியரைப்போல், திருஅவையும், காயப்பட்டிருக்கும் அமேசான் பகுதியில் இரக்கத்தோடும், நீதியோடும் தன் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின், புலம் பெயர்ந்தோர் பிரிவின் நேரடிச் செயலரும், அமேசான் சிறப்பு ஆயர்கள் மாமன்றத்தின் சிறப்பு செயலருமான இயேசு சபை அருள்பணியாளர் Michael Czerny அவர்கள், வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவில் வெளியிட்டுள்ள கட்டுரையில் இவ்வாறு கூறியுள்ளார்.

அமேசான் பகுதியில், சுற்றுச்சூழல் மாற்றங்களையும், அதே நேரம், மேய்ப்புப்பணி சார்ந்த மாற்றங்களையும் கொணரும் நோக்கத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த சிறப்பு ஆயர்கள் மாமன்றத்தை கூட்டியுள்ளார் என்பதை, அருள்பணி Czerny அவர்கள், தன் கட்டுரையின் துவக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடல், சுற்றுச்சூழலுக்கும், பூமிக்கோளத்திற்கும் நிகழும் ஆபத்துக்களை பல்வேறு கோணங்களிலிருந்து காண நம்மை அழைப்பதைப்போல, அமேசான் சிறப்பு ஆயர்கள் மாமன்றத்திற்கென உருவாக்கப்பட்டுள்ள Instrumentum Laboris என்ற ஏடும் நம்மைச் சிந்திக்க அழைக்கிறது என்று அருள்பணி Czerny அவர்கள், தன் கட்டுரையில் கூறியுள்ளார்.

பல்வேறு நாட்டு அரசுகளும், ஐ.நா. அவை போன்ற உலக அமைப்புக்களும், அமேசான் காடுகளைப் பற்றி, பல விதிமுறைகளை அறிவித்திருந்தாலும், அவற்றை அலட்சியம் செய்யும் வர்த்தக உலகின் படையெடுப்பு, திருஅவை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும் ஒரு பெரும் சவாலாக அமைகிறது என்று அருள்பணி Czerny அவர்கள், தன் கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமேசான் காடுகளை அழிக்க நினைப்போரை தடுத்து நிறுத்த, 2003ம் ஆண்டுக்கும், 2017ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் முயன்றவர்களில் 1,119 மண்ணின் மைந்தர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை, தன் கட்டுரையில் குறிப்பிடும் அருள்பணி Czerny அவர்கள், இந்த அநீதியைத் தடுக்க முயலும் திருஅவையும் அதற்குரிய விலையை தரவேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார்.

31 July 2019, 15:18