தேடுதல்

அமெரிக்க  விண்வெளி வீரர்கள் பஸ் ஆல்டிரின்(L) , நீல் ஆம்ஸ்ட்ராங் அமெரிக்க விண்வெளி வீரர்கள் பஸ் ஆல்டிரின்(L) , நீல் ஆம்ஸ்ட்ராங் 

நிலவில் கால்பதித்த முதல் மனிதரிடம் புனித திருத்தந்தை 6ம் பவுல்

நிலவில் முதன்முதலில் காலடி பதித்த மனிதர்களுக்கு, புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் வழங்கிய வாழ்த்தையும், ஆசீரையும், அந்நிகழ்வின் ஐம்பதாம் ஆண்டு நிறைவு நாளில் நினைவுகூர்ந்துள்ளது வத்திக்கான் வானொலி.

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

நிலவில் முதன்முதலில் காலடி பதித்த மனிதர்களுக்கு, புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் வழங்கிய வாழ்த்தையும், ஆசீரையும், அந்நிகழ்வின் ஐம்பதாம் ஆண்டு நிறைவான ஜூலை 20, இச்சனிக்கிழமையன்று நினைவுகூர்ந்துள்ளது வத்திக்கான் வானொலி.

1969ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டு மூன்று விண்வெளி வீரர்களை (Neil Armstrong, Buzz Aldrin, Michael Collins), நிலவிற்கு ஏற்றிச்சென்ற அப்போல்லோ 11 விண்கலம், ஜூலை 20ம் தேதி நிலவில் இறங்கியது. நிலவில் வீரர்கள் நிலவில் இறங்கிய அந்த அதிசயத்தை, காஸ்தெல்கந்தோல்போ வத்திக்கான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், நிலவை வென்றவர்கள் என்று தன் வாழ்த்தையும், நன்மதிப்பையும் தெரிவித்துள்ளார்.

மனிதர் நிலவில் நடந்தது, கடவுளின் கைவண்ண வேலையின் மகத்துவத்தை அங்கீகரிப்பதாக உள்ளது என்றும், புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், அச்சமயத்தில் தெரிவித்துள்ளார்  

அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் சோவியத் ரஷ்யாவுக்கும் இடையே பனிப்போர் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில், இரஷ்ய விண்வெளி வீரர் யூரி காகரின் அவர்கள், 1961ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி, புவியின் சுற்றுவட்டப்பாதையில் ஒரு சுற்றை நிறைவுசெய்ததையடுத்து, விண்வெளியில் பறந்த முதல் மனிதர் என்று பெயர் பெற்றார். அதற்குப் போட்டியாக, அமெரிக்க ஐக்கிய நாடு நிலவுக்கு மனிதரை அனுப்பியது.

நிலா, புவியிலிருந்து 2,40,000 மைல்கள் தொலைவில் உள்ளது. இது புவியை ஒன்பதரை தடவை சுற்றிவருவதற்குச் சமமான தூரமாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 July 2019, 14:03