தேடுதல்

விண்வெளி வீரர்கள் நிலவில் காலடி பதித்த நிகழ்வை தொலைக்காட்சியில் கண்ட புனித திருத்தந்தை 6ம் பவுல் விண்வெளி வீரர்கள் நிலவில் காலடி பதித்த நிகழ்வை தொலைக்காட்சியில் கண்ட புனித திருத்தந்தை 6ம் பவுல் 

மனிதர் முதலில் நிலவில் கால்பதித்ததையொட்டி புனித 6ம் பவுல்

திருத்தந்தை புனித 6ம் பவுல் - உண்மையான மனித முன்னேற்றம், உடன்பிறந்த உணர்வு மற்றும் அமைதியான வாழ்வில் உள்ளது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

1969ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டு நாசா விண்வெளி மையம், புளோரிடா மாநிலத்திலிருந்து, Apollo -11 விண்கலத்தில், நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் அல்ட்ரின்,மைக்கிள் கொலின்ஸ் (Neil Armstrong, Buzz Aldrin, Michael Collins) ஆகிய மூன்று விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பியது. அதற்கு நான்கு நாள்கள் சென்று, ஜூலை 20ம் தேதி, நியு யார்க் நேரப்படி, இரவு 10.50 மணிக்கு, நீல் ஆம்ஸ்ட்ராங் அவர்கள், முதலில் நிலாவில் இறங்கினார்.

இந்த அறிவியல் சாதனை நிகழ்ந்த ஐம்பதாம் ஆண்டு நிறைவு, அண்மையில் சிறப்பிக்கப்படவிருப்பதையடுத்து, 1969ம் ஆண்டு ஜூலை 13, 20 ஆகிய இரு ஞாயிறுகளில், திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், மூவேளை செப உரைகளில், வெளிப்படுத்திய எண்ணங்களை, ஜூலை 13, இச்சனிக்கிழமையன்று, வத்திக்கான் செய்திகள், மீண்டும் நினைவுபடுத்தியுள்ளன.  

கற்பனையில்கூட கனவு காண இயலாது என எண்ணியிருந்ததை, அறிவியலும், தொழில்நுட்பமும் முறியடித்துக் காட்டியுள்ளன என்று வியந்து, அந்த வீரர்களுக்கு, வாழ்த்தையும், ஆசீரையும் தெரிவித்திருந்தார், திருத்தந்தை புனித 6ம் பவுல்.

மனிதரின் இந்தச் சாதனை, கனவுகள் அல்ல, அறிவியல் புதினம், உண்மையாகியுள்ளது, மனிதரின் அறிவு வியக்க வைக்கின்றது என்று கூறியுள்ள திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், மனிதர் பற்றியும், இந்த அசாதாரண, வியப்பான நிகழ்வு பற்றியும், இப்பிரபஞ்சம் பற்றியும் தியானிக்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

மனிதரின் அறிவு பரவசமடையச் செய்கின்றது, அதேநேரம், எல்லா வரையறைகளையும் கடந்துசெல்லும் மனிதரின் திறமை, மனிதருக்கு நன்மையை விளைவிக்குமா, இந்த அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு மனிதர் அடிமையாகி விடுவார்களா போன்ற கேள்விகளையும் எழுப்பியிருந்தார், திருத்தந்தை புனித 6ம் பவுல்.

இன்று இந்த மாபெரும் வெற்றியைக் கொண்டாடுகிறோம், அதேநேரம், மனிதர் தங்களின் நேரம், திறமை மற்றும் படைப்பாற்றலை, அவர்களின் இல்லமாகிய இப்பூமியில் நிலவும் பிரச்சனைகளைத் தீர்க்கவும் பயன்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருந்தார் அவர்.  

இன்று இப்பூமியில், வியட்நாம், ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு ஆகிய மூன்று இடங்களில் போர்கள் நடக்கின்றன, நான்காவதாக இன்னொன்றும் சேர்ந்துள்ளது, எல் சால்வதோர் மற்றும் ஹொண்டூராஸ் நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர் என்றும் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். (ஜூலை 20,1969)

மனித சமுதாயம் முழுவதையும் இன்றும் பசி வாட்டுகின்றது, உண்மையான மனிதம் எங்கே? உண்மையான உடன்பிறந்த உணர்வு எங்கே? அமைதி எங்கே? என்ற கேள்விகளையும் எழுப்பியிருந்த திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், உண்மையான மனித முன்னேற்றம், உடன்பிறந்த உணர்வு மற்றும் அமைதியான வாழ்வில் உள்ளது எனவும் கூறியிருந்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 July 2019, 16:32