குரோவேஷியாவின் சாக்ரெப் அன்னை மரியா பேராலயம் குரோவேஷியாவின் சாக்ரெப் அன்னை மரியா பேராலயம்  

சுற்றுலா உலக நாளுக்கு திருப்பீடத்தின் செய்தி

முக்கியத் தலங்களைப் பார்வையிடுவது மட்டும் சுற்றுலாவின் நோக்கமல்ல, மாறாக, மக்களைச் சந்திப்பதும் அதன் முக்கிய நோக்கம் - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இவ்வாண்டு செப்டம்பர் 27ம் தேதி சிறப்பிக்கப்படவிருக்கும் சுற்றுலா உலக நாளுக்கென, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், ஜூலை 23, இச்செவ்வாயன்று செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

சுற்றுலாவும் ஒரு தொழில்

"சுற்றுலாவும் தொழில்களும்: அனைவருக்கும் சிறப்பான ஓர் எதிர்காலம்" என்பது, இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் உலக நாளுக்கென தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மையக் கருத்து என்பதை, தன் செய்தியின் துவக்கத்தில் குறிப்பிடும் கர்தினால் டர்க்சன் அவர்கள், சுற்றுலாவை ஒரு தொழில் என்று ஏற்றுக்கொள்வது, அதற்குரிய மதிப்பை வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

படைப்பின் துவக்கத்திலிருந்தே, தொழில் புரிவது மனிதருக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு கடமை என்பதையும், படைப்பின் வழியே தொடர்ந்து பணியாற்றிவரும் விண்ணகத் தந்தையைப் போல, மனிதர்களும் பணியாற்ற அழைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளதை, கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கிய 'இறைவா உமக்கே புகழ்' திருமடல், திருஅவையின் சமுதாய படிப்பினைகள், புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், 24வது சுற்றுலா உலக நாளுக்கென வழங்கிய செய்தி ஆகிய பல்வேறு ஏடுகளிலிருந்து, கர்தினால் டர்க்சன் அவர்கள் மேற்கோள்களை வழங்கியுள்ளார்.

இன்று 200 கோடி சுற்றுலாப் பயணிகள்

உலகில் காணப்படும் 11 தொழில்களில் ஒன்று சுற்றுலாவுடன் தொடர்புடைய தொழில் என்று, ஐ.நா.வின் உலக சுற்றுலா நிறுவனம் (UNWTO) அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரம் கூறுவதை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், 1950களில், 2 கோடியே 50 இலட்சமாக இருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, இன்று 200 கோடியாக உயர்ந்திருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாவும், சந்திக்கும் கலாச்சாரமும்

முக்கியத் தலங்களைப் பார்வையிடுவது மட்டும் சுற்றுலாவின் நோக்கமல்ல, மாறாக, மக்களைச் சந்திப்பதும் அதன் முக்கிய நோக்கம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோரிடம் கூறியதை தன் செய்தியில் குறிப்பிடும் கர்தினால் டர்க்சன் அவர்கள், சந்திக்கும் கலாச்சாரத்தை வளர்ப்பது, இன்றைய உலகின் முக்கியத் தேவை என்பதையும் தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா. அவையின் சுற்றுலா நிறுவனம் UNWTO, 1980ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி முதல் கொண்டாடிவரும் சுற்றுலா உலக நாள், இவ்வாண்டு, தன் 40வது உலக நாளைச் சிறப்பிக்கின்றது என்பதும், இந்த 40வது உலக நாளின் கொண்டாட்டங்களுக்கு, இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 July 2019, 14:40