தேடுதல்

Vatican News
திருப்பீடத்திற்கும், புர்கினோ ஃபாசோவுக்கும் இடையே ஒப்பந்தம் திருப்பீடத்திற்கும், புர்கினோ ஃபாசோவுக்கும் இடையே ஒப்பந்தம்   (Vatican Media)

திருப்பீடத்திற்கும், புர்கினோ ஃபாசோவுக்கும் இடையே ஒப்பந்தம்

முன்னாள் ப்ரெஞ்ச் காலனியாகிய புர்கினோ ஃபாசோ நாட்டில், 60.5 விழுக்காட்டினர் முஸ்லிம்கள் மற்றும், 19 விழுக்காட்டினர் உரோமன் கத்தோலிக்கர்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

புர்கினோ ஃபாசோ நாட்டில், கத்தோலிக்கத் திருஅவை சட்டமுறைப்படி அங்கீகரிக்கப்படுவது குறித்த ஒப்பந்தத்தில், அந்நாடும், திருப்பீடமும், ஜூலை 12, இவ்வெள்ளியன்று, வத்திக்கானில் கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தத்தில், திருப்பீடத்தின் சார்பில், திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களும், புர்கினோ ஃபாசோ சார்பில், அந்நாட்டின் வெளியுறவு மற்றும் ஒத்துழைப்புத் துறை அமைச்சர் Alpha Barry அவர்களும், கையெழுத்திட்டுள்ளனர்.

ப்ரெஞ்ச் மொழியில் 19 எண்கள் கொண்ட இந்த ஒப்பந்தத்தில், புர்கினோ ஃபாசோ நாட்டில் திருஅவை தனது மறைப்பணியை ஆற்றுவதற்குரிய வாய்ப்புகளுக்கும், குறிப்பாக, திருஅவை மற்றும் திருஅவை நிறுவனங்கள் சட்டமுறைப்படி அங்கீகரிக்கப்படுவதற்கும் உறுதியளிக்கப்பட்டுள்ளன.  

இவ்விரு நாடுகளின் சுதந்திரம் மற்றும் தன்னாட்சி உரிமை பாதுகாக்கப்படும் அதேவேளை, மனிதரின் அறநெறி, ஆன்மீகம் மற்றும் பொருளாதார நலனையும், பொதுநலனையும் ஊக்குவிப்பதில், இவ்விரு நாடுகளும் ஒத்துழைப்பு வழங்கவும், இந்த ஒப்பந்தம் உறுதியளிக்கின்றது.

முன்னாள் ப்ரெஞ்ச் காலனியாகிய புர்கினோ ஃபாசோ நாட்டில், 2006ம் ஆண்டு வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, அந்நாட்டில் 60.5 விழுக்காட்டினர் முஸ்லிம்கள் மற்றும், 23.2 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். இக்கிறிஸ்தவர்களில் 19 விழுக்காட்டினர் உரோமன் கத்தோலிக்கர்.

மேற்கு ஆப்ரிக்காவிலுள்ள இந்நாடு, 1960ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி பிரான்சிடமிருந்து விடுதலை அடைந்தது.

12 July 2019, 14:57