தேடுதல்

வின்சென்ட் லாம்பெர்ட்டின் மருத்துவ உதவிகள் நிறுத்தப்பட்டதை அறிந்த மக்கள் செபித்தபோது.... வின்சென்ட் லாம்பெர்ட்டின் மருத்துவ உதவிகள் நிறுத்தப்பட்டதை அறிந்த மக்கள் செபித்தபோது....  

வின்சென்ட் லாம்பெர்ட் இறைவனடி சேர்ந்தார்

கடந்த 11 ஆண்டுகளாக மருத்துவமனையில், செயலிழந்து, பாதி நினைவிழந்து வாழ்ந்த வின்சென்ட் லாம்பெர்ட் அவர்கள், ஜூலை 11, இவ்வியாழன் காலை இறைவனடி சேர்ந்தார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாரிஸ் மாநகரில் கடந்த 11 ஆண்டுகளாக மருத்துவமனையில், செயலிழந்து, பாதி நினைவிழந்து வாழ்ந்த வின்சென்ட் லாம்பெர்ட் அவர்கள், ஜூலை 11, இவ்வியாழன் காலை இறைவனடி சேர்ந்தார் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்தனர்.

திருப்பீடத்தின் ஆழ்ந்த அனுதாபம்

வின்சென்ட் லாம்பெர்ட் அவர்களின் மரணம் குறித்த செய்தியை கேட்டு வேதனையடைந்தோம், இறைவன் அவரை தன் இல்லத்திற்குள் வரவேற்கவேண்டும் என்று மன்றாடுகிறோம் என்று வத்திக்கான் செய்தித்துறை தலைவர், அலெஸ்சாந்த்ரோ ஜிசோத்தி அவர்கள் அறிவித்துள்ளார்.

உயிர்களின் துவக்கம் முதல் அவற்றின் இயற்கையான முடிவு வரை, இறைவன் ஒருவரே வாழ்வின் மீது முழு அதிகாரம் கொண்டவர் என்று திருத்தந்தை கூறியுள்ளதை நாம் நினைவில் கொண்டு, தூக்கியெறியும் கலாச்சாரத்திற்கு நம்மையே உட்படுத்தாமல் வாழ்வோமாக என்று ஜிசொத்தி அவர்களின் செய்தி, மேலும் கூறியுள்ளது.

வின்சென்ட் லாம்பெர்ட் குறித்த வழக்கு

மனநல மருத்துவத்தில் உதவியாளராகப் பணியாற்றிய லாம்பெர்ட் அவர்கள், 2008ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில், உடலின் உறுப்புக்களில் உணர்விழந்து, மூளையும் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவ மனையில் கிடந்தார்.

அவரை உயிரோடு வைத்திருக்க பயன்படுத்தப்பட்ட உதவிகளை நீக்கவேண்டும் என்று அவரது குடும்பத்தில் ஒரு சிலர் கேட்டபோது, லாம்பெர்ட் அவர்களின் பெற்றோர் அதை முற்றிலும் எதிர்த்து, வழக்கு தொடர்ந்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கின் இறுதியில் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, ஒரு வாரத்திற்கு முன், லாம்பெர்ட் அவர்கள் உடலில் செலுத்தப்பட்டு வந்த நீர், மற்றும் உணவு நிறுத்தப்பட்டன.

இந்த முடிவைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 10, இப்புதனன்று, வாழ்வைப் பாதுகாப்பது ஒன்றே மருத்துவர்களின் பணி என்ற கருத்தில் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

பாரிஸ் பேராயரின் விண்ணப்பம்

பாரிஸ் உயர் மறைமாவட்டத்தின் பேராயர், Michael Aupetit அவர்கள், தன் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து அருள்பணியாளர்களும், லாம்பெர்ட் அவர்களின் கருத்துக்களுக்காக திருப்பலி ஒப்புக்கொடுக்குமாறு இச்செவ்வாயன்று கேட்டுக்கொண்டார்.

F1 என்று புகழ்பெற்ற கார் பந்தயத்தில் வெற்றிபெற்ற வீரரான Michael Schumacher அவர்கள், 2013ம் ஆண்டு, சாலை விபத்தில் அடிபட்டு, வின்சென்ட் லாம்பெர்ட் அவர்களைப் போன்ற நிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் Aupetit அவர்கள், Schumacher அவர்கள், கடந்த ஆறு ஆண்டுகளாக, தனியார் மருத்துவ மனையில், மருத்துவ உதவிகள் பெற்றுவருகிறார் என்றும், அவரது நிலையைக் குறித்து, ஊடகங்கள் கருத்து தெரிவிக்காமல், அவரை வாழவிட்டுள்ளன என்றும் கூறினார்.

இவ்வுலகில், வாழத் தகுதியுள்ளவர் யார், தகுதியற்றவர் யார் என்று தீர்மானிக்கும் உரிமையை, ஊடகங்களுக்கும், அதிகார அமைப்புக்களுக்கும் விட்டுவிடுவது தவறு என்று பேராயர் Aupetit அவர்கள், கூறியுள்ள கருத்தை CNA கத்தோலிக்கச் செய்தி வெளியிட்டுள்ளது. (REI / CNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 July 2019, 15:51