தேடுதல்

Vatican News
கத்தோலிக்க இளையோர் மாநாடு, பானமா (கோப்புப் படம்) கத்தோலிக்க இளையோர் மாநாடு, பானமா (கோப்புப் படம்)   (AFP or licensors)

படைப்பாற்றலால் ஐரோப்பாவிற்கு புத்துயிர்கொடுங்கள்

உரோம் மறைமாவட்டம், இளையோரை அரசியல் வாழ்வுக்குத் தயாரிக்கும் நோக்கத்தில், முதல்முறையாக கோடைகால பயிலரங்கத்தை நடத்தி வருகிறது. இதில் நூறு இளையோர் பங்கு பெற்று வருகின்றனர்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இயேசுவின் நற்செய்தியை மறக்காமல், படைப்பாற்றல் திறனால் ஐரோப்பாவிற்கு மீண்டும் புத்துயிர் கொடுங்கள் என்று, இத்தாலிய இளையோர் குழு ஒன்றிடம் கேட்டுக்கொண்டார், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.

இத்தாலியின் பிரஸ்காத்தியில், ‘இளையோரை அரசியலுக்குத் தயாரித்தல்’ என்ற தலைப்பில் நடைபெற்றுவரும் பயிலரங்கத்தில் உரையாற்றிய, கர்தினால் பரோலின் அவர்கள், சிறந்த கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கு, கைகளை அழுக்கடையச் செய்வதற்கு அஞ்ச வேண்டாம் என்று கூறினார்.

ஐரோப்பிய ஒன்றிணைப்பு நடைமுறையில், கிறிஸ்தவ விழுமியங்கள் முக்கிய பங்கைக் கொண்டிருந்தன, ஆனால், அவை, இன்று மறைந்து வருவதைக் கண்டு வருகிறோம் என்றும், கர்தினால் பரோலின் அவர்கள் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றிணைப்பு திட்டத்தை முன்னோக்கி இயக்கும் சக்திகள் குறைந்து வருவது, அரசியலில் பொருளாதாரம் முன்னுரிமை கொடுக்கப்படுவது, உரிமைகள் என்ற சொல்லாடலின் பொருள் மாறி வருவது, கிரேக்க-உரோமன் சிந்தனையோடு உள்ள தொடர்பு துண்டிக்கப்படுவது போன்றவை கவலையளிக்கின்றன என்றும், கர்தினால் பரோலின் அவர்கள் கூறினார்.

மக்களுக்கு இடையே உறவுகளை உருவாக்குதலின் அடிப்படையில், ஐரோப்பா கட்டி எழுப்பப்பட வேண்டும் என்பதில், நாம் கவனமாய் இருக்க வேண்டுமென வலியுறுத்திய கர்தினால் பரோலின் அவர்கள், வரலாற்றில் தோல்வியடைந்த, மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கு ஆதரவாகப் பேசுபவர்கள், திருஅவையை ஒதுக்கி வைப்பதை அனுமதிக்க முடியாது என்றும் கூறினார்.

27 July 2019, 15:58