கர்தினால் பியெத்ரோ பரோலின் கர்தினால் பியெத்ரோ பரோலின் 

மருத்துவ சிகிச்சை, குணப்படுத்தும் பணி மட்டுமல்ல..

உரோம் பம்பினோ ஜேசு சிறார் மருத்துவமனை, ஏறத்தாழ இருபது இலட்சம் புறநோயாளிகளுக்குப் பணியாற்றி வருகிறது. 29 ஆயிரம் நோயாளிகள் அங்கு அனுமதிக்கப்படுகின்றனர்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

குணமாக்கமுடியாத நோய்கள் உள்ளன, ஆனால், சிகிச்சை அளிக்கப்பட முடியாத நோய்கள் இல்லை, ஏனெனில், நோயாளியைப் பாரமரிப்பது என்பது, அவரைக் குணப்படுத்துதல் மட்டுமல்ல, அவரோடு இருந்து அவரைப் பாதுகாத்தலுமாகும் என்று, திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், உரோம் குழந்தை இயேசு மருத்துவமனையில் உரையாற்றினார்.

உரோம் நகரிலுள்ள, வத்திக்கானின் பம்பினோ ஜேசு எனப்படும் குழந்தை இயேசு சிறார் மருத்துவமனையின், 2018ம் ஆண்டின் கையிருப்பு மற்றும் பயன்பாட்டுக் கணக்கு விவரம் குறித்த கூட்டத்தில், ஜூலை 24, இப்புதனன்று உரையாற்றிய, கர்தினால் பரோலின் அவர்கள், அம்மருத்துவமனையின் நிர்வாகிகள் மற்றும், பணியாளர்களின் மருத்துவ சாதனைகளுக்குத் தனது பாராட்டைத் தெரிவித்தார்.

150 வருட பழமையுடைய பம்பினோ ஜேசு சிறார் மருத்துவமனை, நான்கு கிளைகளைக் கொண்டிருக்கின்றது. இத்தாலி மற்றும், வெளிநாடுகளிலிருந்து, சிறாரும், வளர்இளம் பருவத்தினரும் சிகிச்சைக்காக இம்மருத்துவமனைக்கு வருகின்றனர். ஐரோப்பாவில் மிகப்பெரிய சிறார் மருத்துவமனையாக விளங்கும் இங்கு, மருத்துவ ஆய்வுகளும் நடைபெறுகின்றன.

பல்வேறு நாடுகளில் மனிதாபிமானத் திட்டங்களை ஆற்றிவரும் இம்மருத்துவமனையில் நலவாழ்வு, அறிவியல் மற்றும், சமுதாயநல செயல்பாடுகள் குறித்த, கையிருப்பு மற்றும் செலவு திட்ட கணக்குகள், சிறப்பாக உள்ளன எனவும், கர்தினால் பரோலின் அவர்கள் பாராட்டினார்.

சின்னஞ்சிறியவர்களைப் பராமரிப்பவர்கள், கடவுள் பக்கம் உள்ளனர் மற்றும், வீணாக்கும் கலாச்சாரத்தைத் தோற்கடிக்கின்றனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மருத்துவமனையின் 150ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் கூறியதை, மீண்டும் நினைவுபடுத்தினார், கர்தினால் பியெத்ரோ பரோலின்.

உடல் உறுப்புகள், உயிரணுக்கள் மற்றும், திசுக்கள்  என, 324, உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளை ஆற்றியுள்ளதுடன், அரிதான நோய்களால் தாக்கப்பட்டுள்ள 13 ஆயிரத்திற்கு அதிகமான நோயாளிகளுக்கும், இம்மருத்துவமனை சிகிச்சை அளித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 July 2019, 14:32