உக்ரைன் கிரேக்க-கத்தோலிக்க வழிபாட்டுமுறையின் நிரந்தர ஆயர் மன்ற உறுப்பினர்களுடன் திருப்பீட அதிகாரிகள் உக்ரைன் கிரேக்க-கத்தோலிக்க வழிபாட்டுமுறையின் நிரந்தர ஆயர் மன்ற உறுப்பினர்களுடன் திருப்பீட அதிகாரிகள் 

உக்ரைன் கிரேக்க-கத்தோலிக்க திருஅவையின் வளர்ச்சியில் ஆர்வம்

உக்ரைன் கிரேக்க-கத்தோலிக்க வழிபாட்டுமுறை திருஅவை மட்டுமல்ல, ஏனைய கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்கத் திருஅவைகளும், வளர்ந்து செழிக்க வேண்டும் என திருத்தந்தை விரும்புகிறார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

உக்ரைன் கிரேக்க-கத்தோலிக்க வழிபாட்டுமுறை திருஅவை, செழிப்புடன் வளர்ச்சியடைய வேண்டுமென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விரும்புகிறார் என்று, அத்தலத்திருஅவையின் தலைவரான, பேராயர் Svjatoslav Shevchuk அவர்கள், செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விருப்பத்தின்பேரில், ஜூலை 05, கடந்த வெள்ளி, ஜூலை 06, சனி ஆகிய இரு நாள்களில் வத்திக்கானில் நடைபெற்ற கூட்டத்தில், பேராயர் Shevchuk அவர்கள், உக்ரைன் கிரேக்க-கத்தோலிக்க வழிபாட்டுமுறையின் நிரந்தர ஆயர் மன்ற உறுப்பினர்கள், பேராயர்கள், அந்நாட்டுடன் தொடர்புடைய திருப்பீட தலைமையகத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டம் பற்றி, ஜூலை 08, இத்திங்களன்று செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்த, உக்ரைன் நாட்டு Kiev-Halyč பேராயர் Shevchuk அவர்கள், போரினால் துன்புறும் உக்ரைன் நாட்டு மக்கள் அனைவருடனும், தான் நெருக்கமாக இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே இக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து, அது நடைபெற்ற இரண்டு நாள்களிலும் கலந்துகொண்டார் என்று கூறினார்.

உக்ரைன் கிரேக்க-கத்தோலிக்க வழிபாட்டுமுறை திருஅவையின் வரலாறு, அதன் ஆன்மீகம், திருவழிபாடு, இறையியல் மற்றும் சட்டமுறையான மரபுகள், அத்திருஅவை, புனித பேதுருவின் வழிவருபவருடன் ஒன்றித்து, அவருக்கு விசுவாசமாக இருப்பது, அத்திருஅவை மறைசாட்சிகளின் குருதியால் முத்திரையிடப்பட்டிருப்பது போன்றவைகள் மீது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், திருப்பீட அதிகாரிகளும் கொண்டிருக்கும்  நன்மதிப்பை, இக்கூட்டத்தில் வெளிப்படுத்தினர் என்றும், பேராயர் Shevchuk அவர்கள் தெரிவித்தார்.

கீழை வழிபாட்டுமுறை திருஅவைகள்

இந்த இரண்டு நாள்கள் கூட்டத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொண்டதைப் பாராட்டிப் பேசிய பேராயர் Shevchuk அவர்கள், உக்ரைன் கிரேக்க-கத்தோலிக்க வழிபாட்டுமுறை திருஅவை மட்டுமல்ல, ஏனைய கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்கத் திருஅவைகளும், வளர்ந்து செழிக்க வேண்டும் என, திருத்தந்தை விரும்புகிறார் எனவும் குறிப்பிட்டார்.

உக்ரைனுக்கு அழைப்பு

உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதி போரினால் துன்புற்றுவரும்வேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டால், அப்போர் முடிவுக்குவர உதவும் என்ற நம்பிக்கையை வெளியிட்ட பேராயர் Shevchuk அவர்கள், திருத்தந்தை உக்ரைன் நாட்டுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்ததாகவும் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 July 2019, 14:50