தேடுதல்

ஏமன் துறைமுகம் ஏமன் துறைமுகம்  

கடல்கொள்ளையர்களை ஒழிக்க ஒத்துழைப்பு அதிகம் தேவை

உலக அளவில் இடம்பெறும் வர்த்தகப் போக்குவரத்தில் 90 விழுக்காடு, கப்பல்கள் வழியாக இடம்பெறுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் ஒரு இலட்சத்திற்கு அதிகமான கப்பல்கள், பிரிட்டன் துறைமுகங்களுக்கு வந்து செல்கின்றன

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

கப்பல்களில் பணியாற்றுவோர் எண்ணற்ற நாடுகளுக்குச் செல்வதால், அவர்களின் வாழ்வு, மிகவும் கவர்ச்சிமிக்கதாய் சிலரின் கண்களுக்குத் தெரிந்தாலும், உண்மையில், அவர்களின் வாழ்வு, சவால்கள் நிறைந்த கடினமான வாழ்வு என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜூலை 14, வருகிற ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும், கடல் ஞாயிறை முன்னிட்டு, திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவைத் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், இந்நாளையொட்டி செய்தி வெளியிட்டுள்ள, கப்பல் தொழிலாளர்களுக்கு திருத்தூதுப்பணியாற்றும், ஸ்டெல்லா மாரிஸ் என்ற பிறரன்பு அமைப்பு, கடல்கொள்ளையர்களால், கப்பல்களில் பணியாற்றுவோரின் உடல்நலம் மற்றும் மனநலம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன என்று, கவலை தெரிவித்துள்ளது.

கடல்கொள்ளையர்களை ஒழிக்கும் முயற்சிகளுக்கு, கப்பல் கட்டும் நிறுவனங்கள், ஆயுள்காப்பீட்டு அமைப்புகள் உட்பட, வர்த்தக மற்றும், கடல்சார்ந்த தொழில் நிறுவனங்கள் அனைத்தும், ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்டுள்ளது, ஸ்டெல்லா மாரிஸ் பிறரன்பு அமைப்பு.

IMB எனப்படும் உலகளாவிய கடல் சார்ந்த அமைப்பு, இவ்வாரத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, 2019ம் ஆண்டின் முதல் பாதிப் பகுதியில், கடல்கொள்ளையர்கள், ஒரு கப்பல் பணியாளரைக் கொலை செய்துள்ளனர், 38 பேரை பிணையலில் வைத்துள்ளனர், மேலும் 37 பேரை கடத்தியுள்ளனர்.

கினி வளைகுடா பகுதியில் கடல்கொள்ளையர் அதிகம் என்றும், கடல் பகுதிகளில் கடத்தப்படும் தொழிலாளரில் 73 விழுக்காடும், பிணையக் கைதிகளாக எடுத்துச்செல்லப்படுபவரில் 92 விழுக்காடும், இப்பகுதியில் இடம்பெறுகின்றன என்றும், IMB அமைப்பு கூறியுள்ளது.

உலக அளவில் இடம்பெறும் வர்த்தகப் போக்குவரத்தில் 90 விழுக்காடு, கப்பல்கள் வழியாக இடம்பெறுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் ஒரு இலட்சத்திற்கு அதிகமான கப்பல்கள், பிரிட்டன் துறைமுகங்களுக்கு வந்து செல்கின்றன என, ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதம் இரண்டாவது ஞாயிறு, கடல் ஞாயிறாகச் சிறப்பிக்கப்படுகிறது. (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 July 2019, 15:02