தேடுதல்

Vatican News
திருப்பீட கத்தோலிக்க கல்வி பேராயம், ஜூன் 10 அன்று வெளியிட்ட புதிய ஏடு திருப்பீட கத்தோலிக்க கல்வி பேராயம், ஜூன் 10 அன்று வெளியிட்ட புதிய ஏடு 

பாலின கருத்தியல், விசுவாசத்திற்கு எதிரானது - திருப்பீட ஏடு

பாலினம், பாலியல் உறவு பற்றிய கிறிஸ்தவக் கண்ணோட்டம் குறித்து இளைய தலைமுறைகளுக்கு கற்றுக்கொடுக்கும் நோக்கத்தில், திருப்பீட கத்தோலிக்க கல்வி பேராயம், ஏடு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

உடலின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் உடல் உறவும், பாலினமும், பிறப்பிலே இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ளன என்றும், இவை, கடவுளின் படைப்புத் திட்டத்தில் ஒரு பகுதி என்றும், பெற்றோர், இளையோர்க்குக் கற்றுக்கொடுப்பதற்கு, கத்தோலிக்கப் பள்ளிகள் உதவ வேண்டும் என, திருப்பீடம் கேட்டுக்கொண்டுள்ளது.

“கடவுள் ஆணையும் பெண்னையும் படைத்தார்: கல்வியில் பாலினக் கருத்தியல் குறித்த கேள்வியில், உரையாடல் பாதையை நோக்கி” என்ற தலைப்பில், திருப்பீட கத்தோலிக்க கல்வி பேராயம், ஜூன் 10, இத்திங்களன்று வெளியிட்ட புதிய ஏட்டில், இவ்வாறு கூறியுள்ளது.

அன்பு குறித்து, குறிப்பாக, மனிதப் பாலியல் உறவு குறித்து இக்காலத்தில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் விவாதங்களுக்கும், பாலினக் கருத்தியல் கோட்பாட்டிலிருந்து வெளிவருகின்ற சவால்களுக்கும், கத்தோலிக்கர் பதிலளிப்பதற்கு உதவியாக, இந்த ஏட்டை வெளியிட்டுள்ளது, கத்தோலிக்க கல்வி பேராயம்.

சிறப்பாக, கத்தோலிக்கப் பள்ளிகளுக்கும், கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் ஏனைய பள்ளிகளில் பணியாற்றும் பெற்றோர், மாணவர்கள், மற்றும் ஆசிரியர்களுக்கும், ஆயர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், திருஅவை இயக்கங்கள் மற்றும் விசுவாசிகளின் கழகங்களுக்குமென, எல்லாத் தரப்பினருக்குமென, இந்த ஏடு வெளியிடப்பட்டுள்ளது.

பாலினக் கோட்பாடு என்று பொதுப்படையாகப் பெயரிட்டு, பாலினம் பற்றிய கருத்தியல் கோட்பாட்டிலிருந்து மாறுபட்ட சவால்கள் எழுந்துள்ளன என்றும், இவை, ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணின் இயல்பான தன்மைக்கு இடையேயுள்ள வேறுபாட்டைப் புறக்கணிக்கின்றது என்றும், அந்த ஏடு கூறுகின்றது.

கடவுள் மனிதனைப் படைத்தபோது, ஆணும் பெண்ணுமாகப் படைத்தார், இது கடவுளின் படைப்புத் திட்டத்தில் உள்ளது என்பதை, கத்தோலிக்கத் திருஅவையின் பெயரால் போதிக்கும் அனைவரும், இளைய தலைமுறையினருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்று, அந்த ஏடு வலியுறுத்துகிறது.

பாலினம், கேள்விக்கு உட்படுத்த இயலாதது மற்றும் முழுமையானது என்ற கோட்பாட்டை, பாலினக் கருத்தியல் கோட்பாடு விளக்க முயற்சிக்கின்றது என்பதையும், பாலியல், பல்வேறு கலாச்சாரங்களில், வித்தியாசமாக வாழப்படுகின்றது என்பதைப் புரிந்துகொள்வதற்கு, பாலினம் பற்றிய அறிவியல் ஆய்வு முயற்சிக்கின்றது என்பதையும், இந்த புதிய ஏடு குறிப்பிட்டுள்ளது.

ஒவ்வொரு மனிதரின் சுதந்திரம் மற்றும் உரிமைகளை மதிப்பதை ஊக்குவிக்கும் அதேவேளை, பாலினத்தை, தனிப்பட்டவர் தெரிந்துகொள்வது அல்லது, மனிதரின் உடலின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் பாலியல் உறவோடு தொடர்பற்றதைக் கண்டுபிடிப்பவர்கள், விசுவாசம் மற்றும் சரியான அறிவார்ந்த காரணத்திற்கு எதிரானவர்கள் என்றும், இந்த ஏடு சாடியுள்ளது. 

திருப்பீட கத்தோலிக்க கல்வி பேராயத் தலைவர் கர்தினால் ஜூசப்பே வெர்சால்தி அவர்களும், அதன் செயலர், பேராயர் ஆஞ்சலோ சானி அவர்களும், இந்த புதிய ஏட்டில் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளனர்.

11 June 2019, 15:22