திருப்பீடத் தூதர்களுடன் திருத்தந்தையும் திருப்பீடச் செயலரும் திருப்பீடத் தூதர்களுடன் திருத்தந்தையும் திருப்பீடச் செயலரும் 

திருப்பீடத்தின் பிரதிநிதிகளுக்கு திருத்தந்தையின் உரை

திருப்பீடத்தின் பிரதிநிதிகளாகப் பணியாற்றும் தூதர்கள், மற்றும் அவர்களைச் சார்ந்தோர் அனைவருக்கும் தேவையான பண்புகளாக, திருத்தந்தை, பத்து கருத்துக்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கத்தோலிக்கத் திருஅவையின் மேய்ப்பர் என்ற கண்ணோட்டத்துடன், திருஅவையின் பிரதிநிதிகளாக உலகெங்கும் பணியாற்றும் உங்கள் அனைவரோடும், நானும் சேர்ந்து சிந்திப்பதற்கு கிடைத்த இந்த வாய்ப்பிற்காக மகிழ்கிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட திருப்பீடத் தூதர்களிடம் கூறினார்.

திருப்பீடத்தின் பிரதிநிதிகளாக உலகெங்கும் பணியாற்றுவோருக்கு ஜூன் 12, இப்புதன் முதல் 15 வருகிற சனிக்கிழமை முடிய வத்திக்கானில் நடைபெற்றுவரும் கூட்டத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக, ஜூன் 13, இவ்வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்த வேளையில், அவர்கள் ஆற்றி வரும் மிக முக்கியமான பணிக்காக தன் நன்றியைக் கூறினார், திருத்தந்தை.

திருப்பீடத்தின் பிரதிநிதிகளாகப் பணியாற்றும் தூதர்கள், மற்றும் அவர்களைச் சார்ந்தோர் அனைவருக்கும் தேவையான பண்புகளாக, திருத்தந்தை, பத்து கருத்துக்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

திருப்பீடத் தூதர், இறைவனின் மனிதராக இருக்க வேண்டும் என்பதை தன் முதல் கருத்தாகக் கூறியத் திருத்தந்தை, இறைவனின் மனிதர், இவ்வுலக மதிப்பீடுகளால் தன்னையே ஏமாற்றிக் கொள்பவர் அல்ல என்றும், நீதி, அன்பு, கருணை, இறைப்பற்று ஆகிய நற்குணங்கள் கொண்டவர் என்றும் விளக்கிக் கூறினார்.

இதையடுத்து, திருஅவையின் மனிதர், என்ற கருத்தை முன்மொழிந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மத்தேயு நற்செய்தியில் நம்பிக்கைக்குரிய ஊழியர் மற்றும் பொல்லாத ஊழியர் ஆகியோரை சித்திரிக்கும் உவமையை, (மத். 24: 48-51) சுட்டிக்காட்டி, எச்சரிக்கை விடுத்தார்.

தன் உடன் ஊழியரை சரிவர நடத்தாத பொல்லாத ஊழியரைப் போல், திருப்பீடத் தூதர்களும், தங்கள் அலுவலகத்தில் பணியாற்றுவோரிடம் கடுமையாக நடந்துகொள்வது தவறு என்பதை, திருத்தந்தை குறிப்பிட்டார்.

திருப்பீடத் தூதர், திருத்தூதுப்பணியில் ஆர்வம் கொண்டவராக, ஒப்புரவை உருவாக்குபவராக, நம்பிக்கை விதைப்பவராக, புதிய முயற்சிகளை மேற்கொள்பவராக, கீழ்படிபவராக, செபத்தில் ஈடுபடுபவராக, பிறரன்பும், பணிவும் கொண்டவராக இருக்கவேண்டும் என்ற ஏனைய எட்டு கருத்துக்களையும் திருத்தந்தை தன் உரையில் பகிர்ந்துகொண்டார்.

திருத்தந்தை புனித பத்தாம் பயஸ் அவர்களின் திருப்பீடச் செயலராகப் பணியாற்றிய இறையடியாரான, கர்தினால் Rafael Merry del Val அவர்கள் உருவாக்கிய, 'பணிவின் பிரார்த்தனை' என்ற செபத்தை, இந்த உரையின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இணைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 June 2019, 15:33