தேடுதல்

Vatican News
ஆயர் Miguel Ángel Ayuso Guixot ஆயர் Miguel Ángel Ayuso Guixot 

பல்சமய உரையாடல் : ஆசியக் கண்ணோட்டம்

மதங்களுக்குரிய அடிப்படை மதிப்பை வழங்குவதற்கு, ஆசிய கலாச்சாரம் கற்றுக் கொடுக்கிறது – பேராயர் காலகர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

செபம், உண்ணாநோன்பு, தர்மம் செய்தல், திருப்பயணம் ஆகிய உன்னத செயல்பாடுகள், அனைத்து உண்மையான மதங்களிலும் உள்ளன என்றும், மதங்கள் வெறுப்பை உருவாக்குகின்றன என்று சொல்வது பொய்யான கருத்து என்றும், திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் பன்னாட்டு கருத்தரங்கிற்கு அனுப்பிய செய்தியில் கூறியுள்ளார்.

"பல்சமய உரையாடல்: ஆசியக் கண்ணோட்டம்" என்ற தலைப்பில், ஜூன் 18, இச்செவ்வாயன்று உரோம் நகர் உர்பானியானா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஒரு பன்னாட்டு கருத்தரங்கிற்கு, பல்சமய திருப்பீட அவையின் தலைவர், ஆயர் Miguel Ángel Ayuso Guixot அவர்கள், அனுப்பிய செய்தியில் இவ்வாறு கூறினார்.

பிரிவுகளை அல்ல, ஒருங்கிணைப்பை உருவாக்குவதே இறைவன் என்றும், அவர் பெயரால் பிரிவுகளை உருவாக்குவது தவறு என்றும் தன் செய்தியில் கூறிய ஆயர் Guixot அவர்கள், வளரும் இளைய தலைமுறையினரை உரையாடல் கலாச்சாரத்தில் வளர்ப்பது மிகவும் அவசியமான தேவை என்று எடுத்துரைத்தார்.

பிப்ரவரி மாதம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், அல் அசார் பெரும் குருவான Ahmad Al-Tayyeb அவர்களும் இணைந்து, அபு தாபியில் வெளியிட்ட அறிக்கையை அடித்தளமாகக் கொண்டு, இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்று கருத்தரங்கின் அமைப்பாளர்கள் கூறினர்.

ஆசிய நாடுகளின் பிரதிநிதிகளாக திருப்பீடத்தில் பணியாற்றும் தூதர்களின் சார்பாக, இந்தோனேசிய தூதர், Agus Sriyono அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கருத்தரங்கில் திருப்பீடத்தின் பல்வேறு அவைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பன்னாட்டு உறவுகள் திருப்பீட அவையின் செயலர், பேராயர் பால் காலகர் அவர்கள், இக்கருத்தரங்கின் இறுதி அமர்வில் உரையாற்றுகையில், மதங்களுக்குரிய அடிப்படை மதிப்பை வழங்குவதற்கு ஆசிய கலாச்சாரம் கற்றுக் கொடுக்கிறது என்பதை, சிறப்பாகக் குறிப்பிட்டார்.

19 June 2019, 15:31