தேடுதல்

Vatican News
FAO எனும் உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தில் அருள்பணி ஃபெர்னாண்டோ கிகா அரெயானோ FAO எனும் உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தில் அருள்பணி ஃபெர்னாண்டோ கிகா அரெயானோ  

"கிராமப்புற வறியோரை அடைய சந்திக்கும் சவால்கள்"

பொருளாதாரச் சரிவு, காலநிலை மாற்றங்கள், மற்றும் மோதல்களாலும் போர்களாலும் உருவாகும் நெருக்கடிகள் என்ற பல்வேறு காரணங்களால், வறியோரின் வாழ்வு, மிகவும் கவலை தரும் நிலையை அடைந்துள்ளது - அருள்பணி அரெயானோ

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கிராமப்புறங்களின் முன்னேற்றம், மற்றும், மிகக் கொடுமையான வறுமையைப் போக்குதல் ஆகியவை, இவ்வுலகம் மேற்கொள்ள வேண்டிய மிக அவசியமான செயல்பாடுகள் என்பதை திருப்பீடம் வலியுறுத்துகிறது என்று திருப்பீடத்தின் உயர் அதிகாரி ஒருவர், பன்னாட்டு கருத்தரங்கில் கூறினார்.

FAO எனும் உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும் பிரதிநிதி, அருள்பணி ஃபெர்னாண்டோ கிகா அரெயானோ அவர்கள், உரோம் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த FAO நிறுவன கூட்டத்தில் ஜூன் 18, இச்செவ்வாயன்று வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

"கிராமப்புறங்களில் வாழும் மிக வறியோரை அடைவதற்கு சந்திக்க வேண்டிய சவால்கள்" என்ற தலைப்பில், FAO நிறுவனம் நடத்திய கருத்தரங்கில், "நம் பொதுவான இல்லத்தைக் காப்பாற்றுவதும், வறட்சியும்: திருப்பீடத்தின் கண்ணோட்டம்" என்ற தலைப்பில், அருள்பணி அரெயானோ அவர்கள் தன் உரையை வழங்கினார். 

உலகெங்கும் நிகழும் பொருளாதாரச் சரிவு, காலநிலை மாற்றங்கள், மற்றும் மோதல்களாலும் போர்களாலும் உருவாகும் நெருக்கடிகள் என்ற பல்வேறு காரணங்களால், வறியோரின் வாழ்வு, மிகவும் கவலை தரும் நிலையை அடைந்துள்ளது என்று அருள்பணி அரெயானோ அவர்கள், தன் உரையில் எடுத்துரைத்தார்.

கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், நீண்ட உரைகள் மற்றும் கட்டுரைகள் ஆகியவை மிகக் கொடிய வறுமையைப் போக்க முடியாது என்பதை தன் உரையில் தெளிவுபடுத்திய அருள்பணி அரெயானோ அவர்கள், ஒருங்கிணைந்த செயல்பாடுகள் இன்றைய உலகின் அவசரத் தேவை என்று கூறினார்.

19 June 2019, 15:43