தேடுதல்

Vatican News
அலெஸ்சாந்த்ரோ ஜிசோத்தி அலெஸ்சாந்த்ரோ ஜிசோத்தி  

திருப்பீடத்தின் பிரதிநிதிகள் வத்திக்கானில் சந்திப்பு

திருப்பீடத்தின் சார்பாக, பல்வேறு நாடுகளில் பணியாற்றும் 98 திருப்பீடத் தூதர்களும், உலக அவைகளில் திருப்பீடத்தின் பிரதிநிதிகளாகப் பணியாற்றும் ஐந்து தூதர்களும் பங்கேற்கும் சந்திப்பு, ஜூன் 12ம் தேதி துவங்கியது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தையின் பிரதிநிதிகளாக உலகெங்கும் பணியாற்றுவோரின் சந்திப்பு, ஜூன் 12, இப்புதன் முதல் 15 இச்சனிக்கிழமை முடிய வத்திக்கானில் நடைபெறுகிறது என்று, வத்திக்கான் செய்தித்துறை தலைவர், அலெஸ்சாந்த்ரோ ஜிசோத்தி அவர்கள் அறிவித்துள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இக்கூட்டத்தினை, திருப்பீடச் செயலரின் அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது என்றும், இக்கூட்டத்தில், பல்வேறு நாடுகளில் பணியாற்றும் 98 திருப்பீடத் தூதர்களும், உலக அவைகளில் திருப்பீடத்தின் பிரதிநிதிகளாகப் பணியாற்றும் ஐந்து தூதர்களும் பங்கேற்கின்றனர் என்றும் ஜிசோத்தி அவர்கள் கூறினார்.

திருஅவையில் கடைபிடிக்கப்படும் சட்டத் திட்டங்களின் இன்றைய நிலை, பன்னாட்டு உறவுகள், பல்சமய உரையாடல் போன்ற கருத்துக்களில் விவாதங்கள் நடைபெறும் என்றும், திருப்பீடத்தில் இயங்கிவரும் ஒவ்வொரு துறையின் தலைவர்களும் இப்பிரதிநிதிகளுடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்வர் என்றும், ஜிசோத்தி அவர்கள் அறிவித்தார்.

இச்சிறப்புக் கூட்டத்தின் துவக்கத் திருப்பலியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், இப்புதன் காலை நிறைவேற்றி மறையுரை வழங்கினார்.

ஜூன் 13, இவ்வியாழனன்று, இக்கூட்டத்தின் பிரிதிநிதிகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்திப்பார் என்றும், ஜூன் 15, இக்கூட்டத்தின் இறுதி நாளன்று, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நடைபெறும் இறுதித் திருப்பலியை திருத்தந்தை முன்னின்று நடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இறுதி நாளன்று, திருத்தந்தையின் பிரதிநிதிகளாகப் பணியாற்றி ஒய்வு பெற்றிருக்கும் 46 அப்போஸ்தலிக்கத் தூதர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொள்வர் என்றும், இவர்கள் அனைவரும் திருத்தந்தையுடன் கலந்துகொள்ளும் மதிய விருந்துடன் இக்கூட்டம் நிறைவு பெறும் என்றும் ஜிசோத்தி அவர்கள் தெரிவித்தார்.

12 June 2019, 15:16