தேடுதல்

Vatican News
உரோம் நகரில் கத்தோலிக்க சான் எஜிதியோ குழுமத்தால் வரவேற்கப்பட்ட சிரியா நாட்டு புலம்பெயர்ந்தோர் உரோம் நகரில் கத்தோலிக்க சான் எஜிதியோ குழுமத்தால் வரவேற்கப்பட்ட சிரியா நாட்டு புலம்பெயர்ந்தோர்  (ANSA)

நாடுகளுக்கு சவாலாக, புலம்பெயரும் பிரச்சனை

மக்கள் புலம்பெயரும் பிரச்சனை, இரவோடிரவாகத் தீர்ந்துவிடக்கூடிய பிரச்சனை அல்ல, அதற்கு, மனிதாபிமான, கிறிஸ்தவ வழியில் தகுந்த தீர்வுகள் காணப்படவேண்டும் - பேராயர் காலகர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மக்கள் புலம்பெயரும் பிரச்சனை, இரவோடிரவாகத் தீர்ந்துவிடக்கூடிய பிரச்சனை அல்ல, அதற்கு, மனிதாபிமான, கிறிஸ்தவ வழியில் தகுந்த தீர்வுகள் காணப்படவேண்டும் என்று, பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள் கூறினார்.

ஜூன் 20, இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்ட புலம் பெயர்ந்தோர் உலக நாளையொட்டி, வத்திக்கான் செய்திக்கு பேட்டியளித்த பேராயர் காலகர் அவர்கள், இப்பிரச்சனை, அனைத்து நாடுகளுக்கும் சவாலாக அமைந்துள்ளது என்பதை தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

புலம் பெயர்ந்தோர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு, பல்வேறு உலக நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை உருவாக்கும் முயற்சிகளிலும், உலகெங்கும் உள்ள கத்தோலிக்க நிறுவனங்களை வழிநடத்தும் முயற்சிகளிலும், திருப்பீட அவை ஈடுபட்டு வருகிறது என்பதை, பேராயர் காலகர் அவர்கள் தன் பேட்டியில் தெளிவுபடுத்தினார்.

மக்கள் புலம் பெயர்வதற்கு அடிப்படை காரணமாக அமைவது, உலகில் நிலவும் மோதல்கள், காலநிலை மாற்றம், மிகக் கொடுமையான வறுமை என்று சுட்டிக்காட்டிய பேராயர் காலகர் அவர்கள், இந்தக் காரணிகளுக்கு ஓர் இரவிலோ, சில நாள்களிலோ தீர்வு காண இயலாது என்பதால், பொறுமையுடன் பணியாற்றவேண்டும் என்று கூறினார்.

இந்தப் பிரச்சனையைச் சூழ்ந்துள்ள இருளை மட்டும் மனதில் எப்போதும் பதிக்காமல், இப்பிரச்சனையைத் தீர்க்க, உலகின் பல பகுதிகளில் நடைபெறும் நேர்மறை முயற்சிகளை நம்பிக்கையுடன் காண்பதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று, பேராயர் காலகர் அவர்கள் தன் பேட்டியின் இறுதியில் குறிப்பிட்டார்.

20 June 2019, 14:44