கர்தினால் பரோலின் கர்தினால் பரோலின்  

திருச்சட்டத்தைத் தாண்டி, அன்பின் சட்டம் உள்ளது

சட்டங்களைக் காப்பதும், அவற்றைக் கடைப்பிடிப்பதும் திருஅவை அதிகாரிகளின் முக்கிய கடமை என்றாலும், இச்சட்டங்கள் அனைத்துமே, அன்புச் சட்டத்தின் கீழ், செயல் வடிவம் வேண்டும் – கர்தினால் பரோலின்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ அழிப்பது குறித்தும், நிறைவேற்றுவது குறித்தும் நற்செய்தியில் கூறப்பட்டுள்ள கருத்து, திருத்தந்தையின் பிரதிநிதிகளாக உலகெங்கும் பணியாற்றுவோருக்கு வழிகாட்டும் கருத்தாக அமைந்துள்ளது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், இப்புதன் காலையில் வழங்கிய மறையுரையில் கூறினார்.

திருத்தந்தையின் பிரதிநிதிகளாக உலகெங்கும் பணியாற்றுவோருக்கு ஜூன் 12, இப்புதன் முதல் 15 வருகிற சனிக்கிழமை முடிய வத்திக்கானில் நடைபெறும் ஒரு கூட்டத்தின் துவக்கத் திருப்பலியை, இப்புதன் காலை, புனித பேதுரு பசிலிக்காவில் நிறைவேற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.

மோசே வழங்கிய சட்டத்தைக் குறித்து இப்புதன் திருப்பலியின் இரு வாசகங்களும் பேசுகின்றன என்பதை (2 கொரி. 3:4-11; மத். 5:17-19) தன் மறையுரையின் துவக்கத்தில் குறிப்பிட்ட கர்தினால் பரோலின் அவர்கள், சட்டங்களைக் குறித்த விவாதங்கள் திருஅவையின் வரலாற்றில், துவக்கத்திலிருந்தே நிலவி வருகிறது என்பதை எடுத்துரைத்தார்.

திருச்சட்டத்தின் ஒரு சிற்றெழுத்தையோ, புள்ளியையோ மாற்றாமல் நிறைவேற்ற தான் வந்துள்ளதாகக் கூறும் இயேசு, ஒய்வு நாள் சட்டத்தை மீறியதையும் காண்கிறோம் என்பதை தன் மறையுரையில் சுட்டிக்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், திருச்சட்டத்தைத் தாண்டி, அன்பின் சட்டம் ஒன்று உள்ளது என்பதை இயேசு இவ்வுலகில் நிலைநாட்டினார் என்று எடுத்துரைத்தார்.

திருத்தந்தையின் பிரதிநிதிகள் என்ற முறையில், திருஅவை சட்டங்கள் மற்றும், உலக அரசுகளின் சட்டங்கள் ஆகியவற்றுடன் நாம் கொண்டுள்ள உறவை, இரு வழிகளில் காணலாம் என்பதை கர்தினால் பரோலின் அவர்கள், குறிப்பிட்டுப் பேசினார்.

சட்டங்களைக் காப்பதும், அவற்றைக் கடைப்பிடிப்பதும் திருஅவை அதிகாரிகளின் முக்கிய கடமை என்றாலும், இச்சட்டங்கள் அனைத்துமே, அன்புச் சட்டத்தின் கீழ், செயல் வடிவம் வேண்டும் என்பதை கர்தினால் பரோலின் அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

கிறிஸ்துவின் மீதும், அவர் உருவாக்கிய திருஅவை மீதும் ஆழ்ந்த அன்பு கொண்டுள்ள அதே வேளையில், மனிதர்கள் மீதும், குறிப்பாக, வறியோர் மீதும் தனிப்பட்ட அக்கறையும், அன்பும் காட்டுவது திருத்தந்தையின் பிரதிநிதிகள் கொண்டிருக்கவேண்டிய பண்புகள் என்று கர்தினால் பரோலின் அவர்கள், தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 June 2019, 15:07