தேடுதல்

Vatican News
2018ம் ஆண்டு சீன ஆயர்கள் திருத்தந்தையுடன் மேற்கொண்ட அத் லிமினா சந்திப்பு - கோப்புப் படம் 2018ம் ஆண்டு சீன ஆயர்கள் திருத்தந்தையுடன் மேற்கொண்ட அத் லிமினா சந்திப்பு - கோப்புப் படம்  (Vatican Media)

சீன அருள்பணியாளர்க்கு மேய்ப்புப்பணி வழிமுறைகள்

சீன அரசின் சட்டங்களுக்குப் பணியவேண்டும் என்பது மட்டுமன்றி, அரசின் அங்கீகாரம் பெறவேண்டுமென்று கட்டாயப்படுத்தப்படும் ஆயர்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் பற்றி திருப்பீடம் அறிந்தே உள்ளது

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

சீன அரசின் விண்ணப்பத்தின்படி, அந்நாட்டில் பணியாற்றும் ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்கள், அரசில் பதிவுசெய்வது தொடர்பாக, மேய்ப்புப்பணி வழிமுறைகளை ஜூன் 28, இவ்வெள்ளியன்று வழங்கியுள்ளது திருப்பீடம்.

சீன அரசின் சட்டங்களுக்குப் பணிய வேண்டும் என்பது மட்டுமன்றி, அரசின் அங்கீகாரம் பெறவேண்டுமென்று கட்டாயப்படுத்தப்படும், திருத்தந்தைக்கு பிரமாணிக்கமாய் இருக்கும் பல அதிகாரிகள் மற்றும் ஆயர்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் பற்றி திருப்பீடம் அறிந்தே உள்ளது என்று, இந்த மேய்ப்புப்பணி வழிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

ஆயர்களும், அருள்பணியாளர்களும், சீன அரசில் பதிவு செய்கையில், ஒவ்வொருவரின் மனச்சான்றின் சுதந்திரம் முழுமையாக மதிக்கப்பட வேண்டும், கத்தோலிக்கச் சமுதாயங்களின் தற்போதைய நிலைமைகள் புரிந்துகொள்ளப்பட வேண்டும், பேதுருவின் வழிவருபவருடன் ஒன்றித்திருப்பது சார்ந்தவைகளில், கத்தோலிக்கத் திருஅவையின் நம்பிக்கைகள் உடைபடாதபடி, சீன அருள்பணியாளர்கள் பதிவுகள் செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் உட்பட, சில குறிப்புகளை திருப்பீடம் அறிவித்துள்ளது.

தங்கள் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டுமென்று சீன அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை முன்னிட்டு, அது குறித்த வழிமுறைகளைக் கேட்டு, சீன அருள்பணியாளர்கள், திருப்பீடத்திடம் தொடர்ந்து விண்ணப்பித்ததை முன்னிட்டு, இந்த மேய்ப்புப்பணி வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மனச்சான்றின் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும், ஒருவர் தனது மனச்சான்றின்படி பதிவுசெய்ய விரும்பவில்லையென்றால், அவ்வாறு செய்வதற்கு அவர் கட்டாயப்படுத்தப்படக் கூடாது, கத்தோலிக்கக் கோட்பாடுகள் மதிக்கப்பட வேண்டும் போன்ற, திருப்பீடத்தின் நிலைப்பாடு அதில் கூறப்பட்டுள்ளது.

திருப்பீடத்திற்கும், சீன மக்கள் குடியரசுக்கும் இடையே உறவுகள் ஏற்படுவதன் புதிய தொடக்கமாக, 2018ம் ஆண்டு செப்டம்பரில், ஆயர்கள் நியமனம் குறித்து, இவ்விரு நாடுகளுக்கும் இடையே, தற்காலிக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இது, அனைத்து சீன ஆயர்களும், திருத்தந்தையுடன் முழு ஒன்றிப்பை கொண்டிருப்பதற்கு ஆரம்ப கட்டமாக அமைந்தது. எனினும், அனைத்து விவகாரங்களும் இன்னும் தீர்க்கப்படவில்லை. இதற்கிடையே, அனைத்து ஆயர்களும், அருள்பணியாளர்களும், சீன அரசின் சட்டப்படி, அரசில் பதிவு செய்ய வேண்டுமென்ற வலியுறுத்தல் தொடர்பாக, இன்னல்கள் எழும்பியுள்ளன. 

28 June 2019, 15:30