தேடுதல்

Vatican News
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் வாடும் மக்கள் இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் வாடும் மக்கள்  (AFP or licensors)

வருங்காலம் குறித்த நம்பிக்கையை மக்களுக்கு வழங்க...

வறட்சியின் காரணமாக மக்கள் குடிபெயர்ந்து வருவது தொடரும் நிலையில், இவற்றை மாற்றியமைக்க ஒவ்வொருவரும் தங்களால் ஆன முயற்சிகளைத் துவக்கவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் :  வத்திக்கான் செய்திகள்

உணவுப் பாதுகாப்பின்மைக்கும், மனிதனின் குடிபெயர்தலுக்கும் காரணமான வறட்சி என்ற பிரச்னை, பல காலமாக தொடர்ந்து வருவது குறித்து ஆழமாக விவாதிக்க வேண்டிய நேரமிது என அழைப்பு விடுத்தார், FAO எனும் உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும் பிரதிநிதி.

பூமி பாலைவனமாதலையும் வறட்சியையும் எதிர்த்துப் போராடும் உலக நாளையொட்டி, FAO நிறுவனத்தில், 'வறட்சியும் வேளாண்மையும்' என்ற தலைப்பில் இடம்பெற்றக் கூட்டத்தில் உரையாற்றிய திருப்பீடப் பிரதிநிதி, அருள்பணி ஃபெர்னாண்டோ கிகா அரெயானோ அவர்கள், வறட்சியின் காரணமாக மக்கள் குடிபெயர்ந்து வருவது தொடரும் நிலையில், இவற்றை மாற்றியமைக்க, ஒவ்வொருவரும், தங்களால் ஆன முயற்சிகளைத் துவக்கவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

வறட்சிக்கும் பாலவனமாதலுக்கும் தண்ணீரின்மையேக் காரணம் என்பதால், தண்ணீர்ச் சிக்கனம் குறித்தும், நீர் நிர்வாகம் குறித்தும் திட்டங்கள் தீட்டப்பட வேண்டியது அவசியம் என்றார் அருள்பணி அரெயானோ.

இன்றைய தொழில்நுட்பங்களின் உதவியுடன், இயற்கை இடற்பாடுகளைக் களையும் முயற்சிகள் முடுக்கி விடப்பட வேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்த அருள்பணி அரெயானோ அவர்கள், வறட்சியை திட்டமிட்டுத் தடுக்கும் முயற்சிகளுடன், பயிர்களைக் காக்கும் திட்டமும், இழப்பீட்டுத் தொகை வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்தார்.

மக்கள் தங்கள் வருங்காலம் குறித்த நம்பிக்கையுடன் வாழும் நோக்கத்தில் நீர் மற்றும் மண் நிர்வாகம் குறித்த மேலாண்மைத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார், அருள்திரு அரெயானோ.

17 June 2019, 16:54