திருத்தந்தை பிரான்சிஸ் அறிக்கையொன்றில் கையொப்பமிடுதல் - கோப்புப் படம் திருத்தந்தை பிரான்சிஸ் அறிக்கையொன்றில் கையொப்பமிடுதல் - கோப்புப் படம் 

அனைத்து அமெரிக்க நீதிபதிகளின் அறிக்கை

அனைத்து அமெரிக்க நீதிபதிகள் உச்சிமாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகளும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், கையெழுத்திட்டனர்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நாடுகளுக்குள்ளும், நாடுகளுக்கிடையிலும், கட்டுப்பாட்டுடன் நடக்கும் வழிகள், பெரிதும் குலைந்துவருவதையும், குறிப்பாக, உலகெங்கும், பொருளாதார, சமுதாய, கலாச்சார உரிமைகள் குலைந்து வருவதையும் கண்டு நாங்கள் மிகவும் கவலை கொள்கிறோம் என்று அனைத்து அமெரிக்க நீதிபதிகள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

சமுதாய உரிமைகளும், பிரான்சிஸ்கன் கொள்கையும் என்ற தலைப்பில், ஜூன் 3, 4 ஆகிய இருநாள்கள், வத்திக்கானில் நடைபெற்ற அனைத்து அமெரிக்க நீதிபதிகள் உச்சிமாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகளும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், கையெழுத்திட்டனர்.

ஒரு சிலரிடம் செல்வம் குவிகிறது

மிகச் சிறிய எண்ணிக்கையில் உள்ள ஒருசிலரது கரங்களில், உலகின் பெரும்பான்மை செல்வங்கள் குவிந்து வருவதையும், கோடிக்கணக்கான மக்களின் அடிப்படை நலவாழ்வும், மனித மாண்பும் குறைந்து வருவதையும் நாங்கள் கவனத்தில் கொள்கிறோம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

நீதிபதிகள் என்ற பொறுப்பில் இருக்கும் நாங்கள், மனித உரிமைகளை நிறைவேற்றவும், அதனை துணிவுடன் நடைமுறைப்படுத்தவும் எழுந்துள்ள மிகப்பெரும் தேவையையும் உணர்கிறோம் என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அனைவருக்கும் சமமான உரிமைகள்

அனைத்து நலன்களும், பொருளாதார, சமுதாய, மற்றும் கலாச்சார உரிமைகளும், மக்கள் அனைவருக்கும் சமமாகக் கிடைப்பதற்கு, அரசுகள், தகுந்த முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று, நீதிபதிகள் இவ்வறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், ஒரு சிலரது தன்னல செயல்பாடுகளால், பூமிக் கோளத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் இழைக்கப்படும் அழிவுகள் நிறுத்தப்படவும், பாரிஸ் மாநகரில் எடுக்கப்பட்ட முடிவுகள் நடைமுறைப்படுத்தப்படவும், அனைத்து நாடுகளும் முயற்சிகள் எடுக்கவேண்டும் என்பதையும், நீதிபதிகள் பரிந்துரைத்துள்ளனர்.

பூமிக்கோளத்தைக் காப்பதற்கும், மனித மாண்பை நிலைநிறுத்தவும், உலக அமைதியைக் கொணரவும், மனித உரிமைகளை உண்மையாக்கவும், அமெரிக்க கண்டத்தில் உள்ள அனைத்து நீதிபதிகளும், இணைந்து செயலாற்றவேண்டும் என்று, இவ்வறிக்கையின் இறுதியில் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 June 2019, 15:17