இயேசுவின் தூய்மைமிகு இருதயம் இயேசுவின் தூய்மைமிகு இருதயம்  

ஜூன் 28, அருள்பணியாளர் புனிதமடையும் நாள்

அருள்பணியாளர்களை, சடங்குகள் நிறைவேற்றும் இயந்திரங்களாகக் கண்ணோக்காமல், அவர்களையும், பரிவோடும், பாசத்தோடும் மக்கள் அணுகி வந்தால், அதுவே, அவர்களுக்கு அளிக்கப்படும் பெரும் ஆதரவாக இருக்கும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூன் 28, இவ்வெள்ளியன்று கொண்டாடப்படும் இயேசுவின் தூய்மைமிகு இருதய திருவிழாவையொட்டி, ஒவ்வோர் ஆண்டும் நிகழ்வதைப்போல், இவ்வாண்டும், அருள்பணியாளர் புனிதமடையும் நாள் சிறப்பிக்கப்படும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

அருள்பணியாளர் பேராயத்தின் தலைவர், கர்தினால் பென்யமீனோ ஸ்டெல்லா அவர்கள் வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியில், இயேசுவின் தூய்மைமிகு இருதய திருவிழா, அருள்பணியாளர் புனிதமடையும் நாளாக சிறப்பிக்கப்படும் பாரம்பரியத்தைக் குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த அருள்பணி மாரியோ வெந்தூரினி (Mario Venturini) அவர்களால், 1926ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பாரம்பரியம் மிக்க இந்நாள், தங்கள் செபம், மற்றும் பணிகளில் அருள்பணியாளர்களை உறுதிப்படுத்தும் நாளாக அமையும் என்று தான் நம்புவதாக கர்தினால் ஸ்டெல்லா அவர்கள் கூறினார்.

இவ்வாண்டு ஏப்ரல் 18ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலியை புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நிறைவேற்றிய வேளையில், அத்திருப்பலியில் பங்கேற்ற அனைத்து அருள்பணியாளருக்கும், கடந்த ஆண்டுகளில் புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலிகளில் தான் வழங்கிய மறையுரைகளின் தொகுப்பை, ஒரு நூலாக திருத்தந்தை வழங்கியதை, கர்தினால் ஸ்டெல்லா அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலி நிகழும் புனித வியாழன், அருள்பணியாளர் நாளாக கொண்டாடப்படுவதால், அன்று, திருத்தந்தை வழங்கியுள்ள கருத்துக்கள் அருள்பணியாளர்களை புனிதத்திற்கு அழைக்கும் சவால்களாக அமைந்துள்ளன என்று கர்தினால் ஸ்டெல்லா அவர்கள் எடுத்துரைத்தார்.

அண்மையக் காலங்களில் அருள்பணியாளரைக் குறித்து ஊடகங்கள் கூறிவரும் கருத்துக்கள், பெரும் பாரமாக, அருள் பணியாளரை வதைத்து வருவதால், ஊடகக் கருத்துக்களுக்கு ஒரு மாற்றாக, அருள்  பணியாளரின் வாழ்வைக் குறித்து திருத்தந்தை கூறியுள்ள கருத்துக்களை, அருள் பணியாளர்கள் வாசித்து, தியானிப்பது உதவியாக இருக்கும் என்று, கர்தினால் ஸ்டெல்லா அவர்கள், தன் பேட்டியில் வலியுறுத்திக் கூறினார்.

அருள்பணியாளர்களை, சடங்குகள் நிறைவேற்றும் இயந்திரங்களாகக் கண்ணோக்காமல், அவர்களையும், பரிவோடும், பாசத்தோடும் மக்கள் அணுகி வந்தால், அதுவே, அவர்களுக்கு அளிக்கப்படும் பெரும் ஆதரவாக இருக்கும் என்று, அருள்பணியாளர் பேராயத்தின் தலைவர் கர்தினால் ஸ்டெல்லா அவர்கள் தன் பேட்டியின் வழியே விண்ணப்பித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 June 2019, 15:25