வத்திக்கான் திருப்பலியில் மறையுரை வழங்கும் கர்தினால் பரோலின் - கோப்புப் படம் வத்திக்கான் திருப்பலியில் மறையுரை வழங்கும் கர்தினால் பரோலின் - கோப்புப் படம் 

நற்கருணை மாநாட்டில் கர்தினால் பரோலின் மறையுரை

"திருநற்கருணை இல்லாமல், என்னால் வாழ இயலாது, அன்புகூர இயலாது, வறியோருக்குப் பணியாற்ற இயலாது" - புனித அன்னை தெரேசா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நாம் மேற்கொள்ளக்கூடிய மிக உன்னத செபம், திருப்பலி என்றும், அங்கு நாம் ஆண்டவரை நேருக்கு நேர் சந்திக்கிறோம் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறைக்கல்வி உரையில் கூறிய சொற்களை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் தான் வழங்கிய ஒரு மறையுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

ஜூன் 14, கடந்த வெள்ளி முதல், ஜூன் 19, இப்புதன் முடிய, இத்தாலியின் Oppido Mamertina-Palmi என்ற மறைமாவட்டத்தில் நடைபெற்ற திருநற்கருணை மாநாட்டின் இறுதித் திருப்பலியை, இப்புதன் மாலையில் நிறைவேற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், அம்மாநாட்டில் கூடியிருப்போர் அனைவருக்கும் திருத்தந்தையின் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

நம் வாழ்வில் நிகழும் பல்வேறு அனுபவங்களின் மையமாக திருநற்கருணை விளங்குகிறது என்பதை தன் மறையுரையில் குறிப்பிட்ட கர்தினால் பரோலின் அவர்கள், நம்பிக்கையும், அன்பும் இழந்து, பசித்திருப்போருடன், இந்த விருந்தை பகிர்ந்துகொள்ள நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று எடுத்துரைத்தார்.

"திருநற்கருணை இல்லாமல், என்னால் வாழ இயலாது, அன்புகூர இயலாது, வறியோருக்குப் பணியாற்ற இயலாது" என்று புனித அன்னை தெரேசா கூறியதையும், "இவ்வுலகம் சூரியன் இன்றி வாழமுடியும், ஆனால், திருப்பலியின்றி வாழ முடியாது" என்று புனித பாத்ரே பியோ கூறியதையும், கர்தினால் பரோலின் அவர்கள், தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.  

"சகோதரரே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட, முதலில் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்" (காண்க. மத். 5:23-24) என்ற மையக்கருத்துடன் நடைபெற்ற இந்த மாநாட்டின் இறுதித் திருப்பலி, San Gaetano Catanoso பங்கு ஆலயத்தில், இப்புதன் மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 June 2019, 14:41