தேடுதல்

Vatican News
பிரசில் பூர்வீக இனத்தவருடன் கர்தினால் லொரென்சோ பால்திசேரி பிரசில் பூர்வீக இனத்தவருடன் கர்தினால் லொரென்சோ பால்திசேரி 

அமேசான் பகுதி மக்கள் சுரண்டப்படுவதிலிருந்து பாதுகாக்க...

பூர்வீகக் குடிகளின் தனிமை, குடிபெயர்தல், நகர்மயமாக்கல், சுரண்டல், ஊழல், ஒன்றிணைந்த நலவாழ்வு, கல்வி, சுற்றுச்சூழல் ஆகியவை குறித்து விவாதிக்க.....

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் :  வத்திக்கான் செய்திகள்

இவ்வாண்டு அக்டோபர் மாதம் 6ம் தேதி முதல் 27ம் தேதி முடிய, வத்திக்கானில் இடம்பெற உள்ள அமேசான் பகுதிக்குரிய உலக ஆயர் மாமன்றக் கூட்டம் குறித்த வழிகாட்டுதல் ஏட்டை இத்திங்களன்று வெளியிட்டு உரையாற்றினார் கர்தினால் லொரென்சோ பால்திசேரி.

உலக ஆயர் மாமன்றத்தின் தலைவராகிய கர்தினால் பால்திசேரி அவர்கள், திருப்பீட தகவல் தொடர்பு அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, இவ்வேட்டை வெளியிட்டபோது, இவ்வேடு, அமேசான் பகுதி வல்லுனர்களின் உதவியுடனும், வத்திக்கானிலுள்ள‌ வல்லுனர்களின் ஆலோசனைகளுடனும் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த ஏடு தயாரிக்கப்பட்டதன் வரலாற்றை விளக்கிக் கூறிய கர்தினால் பால்திசேரி அவர்கள், அமேசான் பகுதி மக்கள் பல்வேறு வழிகளில் சுரண்டப்படுவதிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகள், அவர்களின் நலவாழ்வை ஊக்குவிக்கும் திட்டம் ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இவ்வேடு அமைந்துள்ளது என்று கூறினார்.

பழங்குடிமக்கள் தங்களையே தனிமைப்படுத்தி வைத்திருப்பது, குடிபெயர்தல், நகர்மயமாக்கல், குடும்பத்தைப் பாதிக்கும் கொள்கைககள், சுரண்டல், ஊழல், ஒன்றிணைந்த நலவாழ்வு, கல்வி, சுற்றுச்சூழல் ஆகியவை குறித்தும் ஆயர் மாமன்றக் கூட்டத்திற்குரிய இத்தயாரிப்பு ஏடு விவாதிக்கிறது என மேலும் கூறினார், கர்தினால் பால்திசேரி.

இப்பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இயேசு சபை அருள்பணி Humberto Miguel Yáñez,  மற்றும், ஆயர் Fabio Fabene ஆகியோரும் இத்தயாரிப்பு ஏடு குறித்து உரையாற்றினர்.

17 June 2019, 16:57