தேடுதல்

Vatican News
செய்தியாளர்கள் சந்திப்பில் கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ - கோப்புப் படம் செய்தியாளர்கள் சந்திப்பில் கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ - கோப்புப் படம்  (ANSA)

திருத்தந்தையின் ஈராக் பயணம் பற்றி கர்தினால் சாக்கோ

ஐக்கிய அமீரகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட பயணம் கிறிஸ்தவ, இஸ்லாமிய உறவை வலுப்படுத்தியதைப் போலவே, ஈராக் நாட்டின் பயணமும் அமையும் - கர்தினால் சாக்கோ

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

2020ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக் நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதை அறிவித்ததும், அந்நாட்டில் விழாக்கோலம் எழுந்துள்ளது என்று, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள், ஆசிய செய்தியிடம் கூறியுள்ளார்.

கீழைவழிபாட்டு முறை திருஅவைகளுக்கு உதவும் ROACO எனப்படும் அமைப்பின் பிரதிநிதிகள், ஜூன் 10, இத்திங்களன்று, தங்கள் 92வது நிறையமர்வுக் கூட்டத்தைத் துவக்கிய வேளையில் அவர்களைச் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் ஈராக் திருத்தூதுப் பயணம் பற்றி குறிப்பிட்டார்.

ஒரே இறைவனை தந்தையெனக் கருதும் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் இப்பயணம் சிறந்ததொரு வாய்ப்பு என்றும், திருத்தந்தை வருவதாக அறிவித்திருப்பது, கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியரையும் ஒருங்கிணைக்கும் மற்றொரு முக்கியத் தருணம் என்றும் கர்தினால் சாக்கோ அவர்கள் தன் பேட்டியில் கூறினார்.

ஈராக் நாட்டின் அரசுத்தலைவர் Barham Salih அவர்களுடன் தான் தொடர்பில் இருப்பதாகவும், திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்தின் விவரங்கள் தற்போது திட்டமிடப்பட்டு வருகின்றன என்றும் கர்தினால் சாக்கோ அவர்கள் தெரிவித்தார்.

ஐக்கிய அமீரகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட பயணம் கிறிஸ்தவ, இஸ்லாமிய உறவை வலுப்படுத்தியதைப் போலவே, ஈராக் நாட்டில் அவர் மேற்கொள்ளும் பயணமும் அமையும் என்று கர்தினால் சாக்கோ அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.

ஈராக் நாட்டிற்கு முதல் முறையாக ஒரு திருத்தந்தை திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் இந்த வரலாற்று நிகழ்வு, இந்நாட்டை விட்டு அச்சத்துடன் வெளியேறிய கிறிஸ்தவர்கள் மீண்டும் தங்கள் சொந்த நாட்டை வந்து சேர அருள்நிறைந்த்தோர் வாய்ப்பாக இருக்கும் என்று கர்தினால் சாக்கோ அவர்கள் தன் பேட்டியை நிறைவு செய்தார். (AsiaNews)

12 June 2019, 15:23