தேடுதல்

Vatican News
திருத்தந்தையுடன் C9 கர்தினால்கள் குழுவின் கூட்டம்  (கோப்பு படம் - 2018) திருத்தந்தையுடன் C9 கர்தினால்கள் குழுவின் கூட்டம் (கோப்பு படம் - 2018)  (Vatican Media)

கர்தினால்கள் ஆலோசனைக் குழுவின் 30வது கூட்டம்

வத்திக்கானின் பல்வேறு துறைகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள ஒரு முன்வரைவு ஏட்டினை, கர்தினால்கள் குழுவின் 30வது கூட்டம், ஆழமாகப் பரிசீலனை செய்தது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு உருவாக்கப்பட்ட கர்தினால்கள் குழுவின் 30வது கூட்டம் ஜூன் 25ம் தேதி, முதல், 27 இவ்வியாழன் முடிய வத்திக்கானில் நடைபெற்றதையடுத்து, இக்கூட்டத்தைக் குறித்து, வத்திக்கான் செய்தித்துறை தலைவர், அலெஸ்சாந்த்ரோ ஜிசோத்தி அவர்கள், இவ்வியாழன் மதியம் செய்தியாளர்களிடம் விவரங்களை வழங்கினார்.

திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின், கர்தினால் ஆஸ்கர் ரொதிரிகுவெஸ் மரதியாகா, கர்தினால் ரெயினார்ட் மார்க்ஸ், கர்தினால் ஷான் பாட்ரிக் ஒ'மாலி, கர்தினால் ஜியூசப்பே பெர்த்தெல்லோ மற்றும் கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் ஆகிய ஆறு பேர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

ஒவ்வொரு நாளும், காலை 9 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 4.30 மணி முதல் 7 மணி வரையிலும் நடைபெற்ற இக்கூட்டங்களில், திருத்தந்தையும் கலந்துகொண்டார் என்றும், புதன் மறைக்கல்வி உரை வழங்கிய வேளை மட்டும் அவர் பங்கேற்கவில்லை என்றும் ஜிசோத்தி அவர்கள் கூறினார்.

வத்திக்கானின் பல்வேறு துறைகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள ஒரு முன்வரைவு ஏட்டினை கர்தினால்கள் குழு ஆழமாகப் பரிசீலனை செய்தது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்தினால்கள் குழுவின் 31வது அமர்வு, செப்டம்பர் மாதம் 17,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஜிசோத்தி அவர்கள் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

27 June 2019, 15:34