தேடுதல்

இலங்கை புனித அந்தோனியார் திருத்தலத்திற்கு பாதுகாப்பு வழங்கும் இராணுவ வீரர்கள் இலங்கை புனித அந்தோனியார் திருத்தலத்திற்கு பாதுகாப்பு வழங்கும் இராணுவ வீரர்கள் 

மத வழிபாட்டுத் தலங்களைக் காக்கும் திட்டங்கள்

இலங்கை, புர்கினா பாசோ, நியூ சிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய இடங்களில் மத வழிபாட்டு நேரங்களில் நிகழ்ந்த தாக்குதல்கள், மத நம்பிக்கை கொண்ட அனைவர் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களாக உள்ளன - பேராயர் அவுசா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒவ்வொருவரும் தங்கள் சுதந்திரமான எண்ணங்களையும், மனசாட்சியையும், மதத்தையும் பின்பற்றும் உரிமைகளை மனித உரிமைகள் அறிக்கை உறுதி செய்துள்ள போதிலும், மத நம்பிக்கைக்காக மக்கள் கொடுமைப்படுத்தப்படும் போக்கு உலகில் வளர்ந்து வருகிறது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. அவையில் உரையாற்றினார்.

நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், மத வழிபாட்டுத் தலங்களைக் காக்கும் திட்டங்கள் என்ற தலைப்பில், ஜூன் 11, இச்செவ்வாயன்று நடைபெற்ற கூட்டத்தில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

மனித உரிமைகள் அறிக்கை உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவுற்றிருந்த போதிலும், இவ்வுரிமைகளில் ஒன்றான மத உரிமை இன்னும் இவ்வுலகில் முழுமையாக உறுதி செய்யப்படாமல் இருப்பது வேதனை தருகிறது என்று பேராயர் அவுசா அவர்கள் கவலை வெளியிட்டார்.

அண்மைய சில மாதங்களில், இலங்கை, புர்கினா பாசோ, நியூ சிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய இடங்களில் மத வழிபாட்டு நேரங்களில் நிகழ்ந்த தாக்குதல்கள், மத நம்பிக்கை கொண்ட அனைவர் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களாக உள்ளன என்று பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய அமீரகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட வேளையில், அவரும், இஸ்லாமிய அல்-அசார் தலைமை குரு, Ahmed Al-Tayyeb அவர்களும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், மத வழிபாட்டுத் தலங்களுக்கு முழுமையான பாதுகாப்பு தருவது, ஒவ்வொரு நாட்டின் அரசுக்கும் முன் உள்ள முக்கிய கடமை என்று கூறப்பட்டுள்ளதை, பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

வழிபாட்டு தலங்களின் பாதுகாப்பு என்று குறிப்பிடும்போது, அது, வெறும் கட்டடங்களின் பாதுகாப்பை மட்டும் குறிப்பதல்ல, மாறாக, மத நம்பிக்கை கொண்ட குழுமத்தையும் கட்டியெழுப்புவதாகும் என்று தன் உரையில் குறிப்பிட்ட பேராயர் அவுசா அவர்கள், மதங்களைப் பற்றிய சரியான கல்வி வழங்குவதன் வழியே இந்தப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 June 2019, 15:11