தேடுதல்

Vatican News
ஐ.நா.வில் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா ஐ.நா.வில் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா 

வன்முறைகளை எதிர்கொள்ளலும், சகிப்புத்தன்மையை வளர்த்தலும்

மத நம்பிக்கைகளைப் பின்பற்றும் சுதந்திரமும், மனச்சான்றின் சுதந்திரமும் மதிக்கப்படுவதன் வழியாகவே சகிப்புத்தன்மையை வளர்க்கமுடியும் – திருப்பீட அவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் :  வத்திக்கான் செய்திகள்

உலகின் பல்வேறு பகுதிகளில் யூதர்களும், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும், வேறு பல மத நம்பிக்கையாளர்களும் அண்மைக்காலங்களில் தாக்கப்பட்டுள்ளது குறித்து ஐ.நா. அவைக் கூட்டத்தில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார், திருப்பீடப் பிரதிநிதி பேராயர் பெர்னதித்தோ அவுசா.

நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், 'மத நம்பிக்கைகளுக்கு எதிரான வன்முறைகளை எதிர்கொள்ளலும், சகிப்புத்தன்மையை வளர்த்தலும்' என்ற கருத்தில் இச்செவ்வாய்க்கிழமையன்று ஐ.நா. தலைமையகத்தில் இடம்பெற்றக் கூட்டத்தில் உரையாற்றிய வேளையில் இவ்வாறு கூறினார்.

மத நம்பிக்கையாளர்கள் மீதும், வழிபாட்டுத் தலங்கள் மீதும் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை கண்டனம் செய்வதில் அனைத்துலக சமூகம் முன்வருவது குறித்து திருப்பீடம் மகிழ்ச்சி அடைகிறது என்பதையும் பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

மத நம்பிக்கைகளைப் பின்பற்றும் சுதந்திரமும், மனச்சான்றின் சுதந்திரமும் மதிக்கப்படுவதன் வழியாகவே சகிப்புத்தன்மையை வளர்க்கமுடியும் என்று கூறிய பேராயர் அவுசா அவர்கள், சில நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள தீவிர மதக்கட்டுப்பாடுகள், மற்றும், வேறு சில நாடுகளில் குறிப்பிட்ட மதங்களுக்கு மட்டும் வழங்கப்படும் ஆதரவு போன்றவை, மத நம்பிக்கையாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராகச் செல்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டினார்.

25 June 2019, 16:18