தேடுதல்

Vatican News
UNRWA அமைப்பிற்கு ஆதரவாகப் போராடும் பாலஸ்தீனியர்கள் UNRWA அமைப்பிற்கு ஆதரவாகப் போராடும் பாலஸ்தீனியர்கள்  (ANSA)

UNRWA அமைப்பின் பணிகளைப் பாராட்டியத் திருப்பீடம்

இஸ்ரேல் பாலஸ்தீனிய நாடுகளுக்கிடையே நிரந்தரத் தீர்வுகள் உருவாகும் வாய்ப்புக்கள் குறைந்து வரும் சூழலில், UNRWA அமைப்பு ஆற்றிவரும் பணிகள், பாலஸ்தீனிய மக்களுக்கு, ஓரளவாகிலும் நம்பிக்கையைக் கொணரும் - பேராயர் அவுசா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாலஸ்தீனிய புலம்பெயர்ந்தோரின் துயர் துடைக்கும் ஐ.நா. நிறுவனமான UNRWA, பாலஸ்தீனியர்களுக்குத் தேவையான கல்வி, நலவாழ்வு பராமரிப்பு, வீட்டு வசதி போன்ற பணிகளில் ஈடுபட்டிருப்பதற்கு, திருப்பீடம் தன் பாராட்டைத் தெரிவிக்கிறது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், UNRWA அமைப்பு, ஜூன் 25, இச்செவ்வாயன்று நடத்திய ஒரு கூட்டத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

இஸ்ரேல் பாலஸ்தீனிய நாடுகளுக்கிடையே நிரந்தரத் தீர்வுகள் விரைவில் உருவாக வாய்ப்புக்கள் குறைந்து வரும் சூழலில், UNRWA அமைப்பு ஆற்றிவரும் பணிகள், பாலஸ்தீனிய மக்களுக்கு, குறிப்பாக, பாலஸ்தீனிய இளையோருக்கு ஓரளவாகிலும் நம்பிக்கையைக் கொணரும் என்று தான் நம்புவதாக, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

UNRWA அமைப்பைப் போலவே, கத்தோலிக்கத் திருஅவையும், பாலஸ்தீனிய மக்களுக்குத் தேவையான கல்வி, நலவாழ்வு பராமரிப்பு ஆகிய உதவிகளை செய்து வருகிறது என்பதையும் பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

உலக நாடுகள் மேற்கொள்ளும் முயற்சியால், இஸ்ரேல் பாலஸ்தீனா ஆகிய இரு நாடுகளுக்குமிடையே, இரு நாடுகள் என்ற தீர்வு விரைவில் கொணரப்படும் என்று தான் நம்புவதாக, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையின் இறுதியில் கூறினார்.

26 June 2019, 15:36