தேடுதல்

இஸ்ரேல் அரசுத்தலைவர் Reuven Rivlin அவர்கள் திருத்தந்தையைச் சந்தித்தல் - கோப்புப் படம் இஸ்ரேல் அரசுத்தலைவர் Reuven Rivlin அவர்கள் திருத்தந்தையைச் சந்தித்தல் - கோப்புப் படம் 

இஸ்ரேல், திருப்பீட தூதரக உறவுகளின் 25ம் ஆண்டு

எருசலேம் நகரை, மதங்களுக்கு இடையே ஒப்புரவும், சந்திப்பும் நிகழும் இடமாக அமைப்பதற்கு, மத மற்றும், அரசியல் முறையில் அர்ப்பணம் அவசியம் - கர்தினால் பரோலின்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

அமைதியின் நகரமான எருசலேம், ஒரே கடவுள் கொள்கையைக் கொண்டிருக்கும் யூதர், கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்களுக்கும், உலகம் முழுவதற்கும், பொதுவான மரபுச்சொத்தாக, அவர்களின் இதயங்களுக்கு மிகவும் நெருக்கமான நகரமாக அமைந்துள்ளது என்று, திருப்பீடச் சயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறினார்.

இஸ்ரேலுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே தூதரக உறவுகள் உருவானதன் 25ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஜூன் 13, இவ்வியாழன் மாலையில் உரோம் நகரில் Major Temple என்ற இடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், வரலாற்றிலும், விசுவாசத்திலும் மிகவும் வளமையான புனித பூமியின் தனித்துவமிக்க பண்பு பற்றியும் உரையாற்றினார்.

மதங்களுக்கு இடையே ஒப்புரவும், சந்திப்பும் நிகழும் இடமாகவும், மதிப்பும், அமைதியான நல்லிணக்கமும் நிறைந்திருப்பதன் அடையாளமாகவும், எருசலேம் நகரை அமைப்பதற்கு, மத மற்றும், அரசியல் முறையில் நடவடிக்கைகள் அவசியம் எனவும், கர்தினால் பரோலின் அவர்கள் கூறினார்.

ஒவ்வொரு மனிதரின் இன்றியமையாத மாண்பைப் பாதுகாப்பதற்கும், சமய, வழிபாட்டு மற்றும் பேச்சு சுதந்திரத்தை ஊக்குவிப்பதற்கும், யூதமத விரோதப்போக்கை அகற்றுவதற்கும், திருப்பீடமும், இஸ்ரேல் நாடும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமென்று அழைப்பு விடுத்தார், திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின்.

கடந்த 25 ஆண்டுகளில், இஸ்ரேலில் திருத்தந்தையரின் முக்கியமான திருத்தூதுப் பயணங்கள் இடம்பெற்றுள்ளன மற்றும், இஸ்ரேல் அதிகாரிகள் வத்திக்கானுக்கு வருகை தந்துள்ளனர் என்றுரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், இவ்விரு நாடுகளும், பல்சமய உரையாலுக்கு ஆதரவாக எண்ணற்ற முயற்சிகளை எடுத்துள்ளன என்றும் கூறினார்.

இஸ்ரேலுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே தூதரக உறவுகள், 1993ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி கையெழுத்திடப்பட்டன. இவை, 1994ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி அமலுக்கு வந்தன. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 June 2019, 15:09