தேடுதல்

Vatican News
தாய்லாந்தில் கர்தினால் பெர்னாண்டோ பிலோனி தாய்லாந்தில் கர்தினால் பெர்னாண்டோ பிலோனி  

தாய்லாந்து நாட்டில் கர்தினால் பிலோனியின் மறையுரை

ஒவ்வொரு கிறிஸ்தவரும் தான் வாழும் சூழலில் கிறிஸ்துவை அறிவிக்க அழைப்பு பெற்றுள்ளார் – தாய்லாந்து மக்களிடம், கர்தினால் பெர்னாண்டோ பிலோனி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இயேசுவே இவ்வுலகின் மீட்பர் என்பதை அறிவிக்கும் பணி, கிறிஸ்தவர்கள் என்ற முறையில், நம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது என்று, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் பெர்னாண்டோ பிலோனி அவர்கள் தாய்லாந்து நாட்டு கத்தோலிக்கரிடம் கூறினார்.

மே 16, கடந்த வியாழன் முதல் தாய்லாந்து நாட்டில் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்ட கர்தினால் பிலோனி அவர்கள், மே 20, இத்திங்களன்று, சிங் மாய் மறைமாவட்டத்தின் மே-போர்ன் மறைபரப்புப் பணித்தளத்தில் திருப்பலியாற்றிய வேளையில், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.

மே-போர்ன் மறைபரப்புப் பணித்தளத்தில் வாழும் பழங்குடியினருக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியிருந்த சிறப்பான வாழ்த்துக்களைத் தெரிவித்த கர்தினால் பிலோனி அவர்கள், ஒவ்வொரு கிறிஸ்தவரும் தான் வாழும் சூழலில் கிறிஸ்துவை அறிவிக்க அழைப்பு பெற்றுள்ளார் என்பதை தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

ஒவ்வொரு கிறிஸ்தவ குடும்பமும் இயேசுவையும், அன்னை மரியாவையும் தங்கள் குடும்பத்தின் மையமாகக் கொண்டு வாழ்வது முக்கியம் என்று எடுத்துரைத்த கர்தினால் பிலோனி அவர்கள், இணைந்து செபிக்கும் குடும்பம் இணைந்து வாழும் என்ற பழமொழியை அவர்களுக்கு நினைவுறுத்தினார்.

தாய்லாந்து நாட்டில் 1669ம் ஆண்டு கிறிஸ்தவம் அறிமுகமானதையடுத்து, 350ம் ஆண்டு நிறைவை, தலத்திருஅவை சிறப்பிக்கும் வேளையில், கர்தினால் பிலோனி அவர்கள், அந்நாட்டில் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டார். (Fides)

22 May 2019, 15:51