தேடுதல்

காரித்தாஸ் பொதுப் பேரவையின் மையக்கருத்து - ‘ஒரே மனிதக் குடும்பம், ஒரே பொதுவான இல்லம்’  அறிவிப்பு காரித்தாஸ் பொதுப் பேரவையின் மையக்கருத்து - ‘ஒரே மனிதக் குடும்பம், ஒரே பொதுவான இல்லம்’ அறிவிப்பு 

காரித்தாஸ் பொதுப் பேரவையின் துவக்கத் திருப்பலி

உலக காரித்தாஸ் அமைப்பின் 21வது பொதுப் பேரவையின் ஆரம்பத் திருப்பலியை வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் தலைமையேற்று நடத்துகிறார், திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகளாவிய காரித்தாஸ் அமைப்பின் 21வது பொதுப் பேரவையின் ஆரம்ப நிகழ்வாக மே 23, இவ்வியாழன், மாலை ஐந்து மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் நடைபெறும் திருப்பலியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலைமையேற்று நடத்துகிறார்.

‘ஒரே மனிதக் குடும்பம், ஒரே பொதுவான இல்லம்’ (One human family, one common home) என்ற தலைப்பில், உலகளாவிய காரித்தாஸ் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள 21வது பொதுப் பேரவை, மே 23, இவ்வியாழன் முதல், மே 28, வருகிற செவ்வாய் வரை உரோம் நகரில் இடம்பெறுகிறது.

இந்தப் பொது பேரவையின் சிறப்புப் பேச்சாளர்களாக, ஐ.நா.வின் உணவு வேளாண்மை நிறுவனமான FAOவின் பொதுச் செயலர், திருவாளர் ஹோசே கிரேசியானோ த சில்வா (José Graziano da Silva) அவர்களும், அமேசான் பகுதியின் மக்களைக் குறித்துப் பேசுவதற்கு, பெரு நாட்டு கர்தினால் பேத்ரோ பர்ரெத்தோ (Pedro Barreto) அவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். 

இப்பொதுப் பேரவையின் ஒரு சிறப்பு ஏற்பாடாக, மே 22, இப்புதனன்று, காரித்தாஸ் பெண்கள், மற்றும் காரித்தாஸ் இளையோர் என்ற இரு அமர்வுகள், முதல் முறையாக நடைபெற்றன.

காரித்தாஸ் பொதுப் பேரவையில் கலந்துகொள்ள வந்திருக்கும் குடிபெயர்ந்தோர், புலம்பெயர்ந்தோர், மற்றும் கருத்தரங்கின் பங்கேற்பாளர்கள் இணைந்து, 20 அடி உயரம் கொண்ட ஒரு படத்தை, சிறு, சிறு புகைப்படங்களால் உருவாக்குவர் என்றும், இந்தப் படத்தில், உலகக் காரித்தாஸ் அமைப்பின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், பிலிப்பீன்ஸ் நாட்டிற்கு குடிபெயர்ந்த தன் மூதாதையர் ஒருவரின் முகத்தை ஒட்டி வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 May 2019, 14:23