தேடுதல்

Vatican News
கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Kurt Koch கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Kurt Koch  (ANSA)

"இடம்பெயரும் மக்கள், எண்ணங்கள், எல்லைகள்"

ஐரோப்பிய நாடுகளை எதிர்கொள்ளும் புலம்பெயர்தல் என்ற சவாலைச் சந்திக்கும் பெரும் சுமை, ஒரு சில நாடுகளுக்கே விடப்பட்டுள்ளது - கர்தினால் Kurt Koch

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகெங்கும் நடைபெறும் குடிபெயர்தல் மற்றும் புலம்பெயர்தல் என்ற விடயங்களால், ஐரோப்பிய நாடுகள் பெரும் சவால்களைச் சந்திக்கின்றன என்றும், இந்தச் சவால்களை எதிர்கொள்ள அனைத்து ஐரோப்பிய நாடுகளும் இணைந்து செயலாற்றவேண்டியது அவசியம் என்றும், வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், SIR என்ற செய்திக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

அகில உலக கத்தோலிக்க-யூத உறவுகள் கழகத்தின் 24வது கூட்டத்தை உரோம் நகரில் நடத்திவரும் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Kurt Koch அவர்கள், ஐரோப்பிய நாடுகளை எதிர்கொள்ளும் புலம்பெயர்தல் என்ற சவாலைச் சந்திக்கும் பெரும் சுமை, ஒரு சில நாடுகளுக்கே விடப்பட்டுள்ளது என்று தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

புலம்பெயர்ந்தோர் பிரச்சனையுடன், யூத, மற்றும் கிறிஸ்தவ சமயங்களுக்கு எதிரான உணர்வுகளும் தூண்டிவிடப்படுகின்றன என்று கர்தினால் Koch அவர்கள் கவலை வெளியிட்டார்.

ஒவ்வொரு சமுதாயத்திலும் இராணுவத்தினர், காவல்துறையினர், மருத்துவர்கள், மாணவர்கள் என்று பல்வேறு குழுவினரும் கொண்டிருக்கும் அடையாளங்கள் பிரச்சனைகளை உருவாக்காத வேளையில், மதக் குழுவினரின் அடையாளங்கள் மட்டும் பிரச்சனைகளை உருவாக்குவது வேதனைக்குரியது என்று, கர்தினால் Koch அவர்கள், தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

"இடம்பெயரும் மக்கள், எண்ணங்கள், எல்லைகள்" என்ற தலைப்பில் அகில உலக கத்தோலிக்க-யூத உறவுகள் கழகம் உரோம் நகரில் நடத்திவரும் 24வது கூட்டத்தில் பங்கேற்போர், மே 15, இப்புதனன்று திருத்தந்தையை புதன் மறைக்கல்வி உரைக்குப்பின் சந்தித்தனர்.  மே 16, இவ்வியாழனன்று இக்கூட்டம் நிறைவடைகிறது.

15 May 2019, 16:14