தேடுதல்

Vatican News
தாய்லாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள கர்தினால் ஃபெர்னாண்டோ ஃபிலோனி தாய்லாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள கர்தினால் ஃபெர்னாண்டோ ஃபிலோனி 

கிறிஸ்தவரின் நற்செய்தி அறிவிப்பு கடமை

ஆசியாவின் தனித்தன்மை என்பது, பல்வேறு தரப்பட்ட மக்கள், அவர்களுக்கே உரிய தொன்மை வாய்ந்த கலாச்சாரம், மதங்கள், மற்றும், ஆன்மீக பாரம்பரியங்கள் ஆகும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆசியாவில், அனைவரையும் கவர்ந்து நிற்கும் அம்சம் என்னவெனில், அங்குள்ள பல்வேறு தரப்பட்ட மக்கள், அவர்களுக்கே உரிய தொன்மை வாய்ந்த கலாச்சாரம், மதங்கள், மற்றும், ஆன்மீக பாரம்பரியங்கள் என உரைத்தார், கர்தினால் ஃபெர்னாண்டோ ஃபிலோனி.

தாய்லாந்தில் திருஅவையின் மறைப்பரப்புப்பணிகள் துவக்கப்பட்டதன் 350ம் ஆண்டு கொண்டாட்டங்களையொட்டி அந்நாட்டில் பயணம் மேற்கொண்டுவரும், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் ஃபிலோனி அவர்கள், Sampran எனுமிடத்தில், துறவறத்தார், அருள்பணி பயிற்சிபெறும் மாணவர்கள், மற்றும் மறைக்கல்வி ஆசிரியர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.

ஆசியாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகச் சிறிய அளவிலேயே உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் ஃபிலோனி அவர்கள், மேன்மை மிகுந்த கலாச்சாரத்தையும், நன்கு கட்டமைக்கப்பட்ட மதங்களையும் கொண்டு வாழும் ஆசியாவில், 85 விழுக்காட்டிற்கும் அதிகமானோர், திருமுழுக்குப் பெறாதவர்கள் என்று கூறினார்.

நம் இருப்பின் உண்மையான அர்த்தத்தைத் தேடும் முயற்சியில் சவாலாகவும், அடையாளமாகவும் நிற்கும் கிறிஸ்தவத்தை தேர்ந்துள்ள ஒவ்வொருவரும், நற்செய்தி அறிவிப்புப் பணியை ஆற்றும் கடமையைப் பெற்றுள்ளார்கள் என்பதையும் கர்தினால் ஃபிலோனி அவர்கள் எடுத்துரைத்தார்.

20 May 2019, 16:03