தேடுதல்

Vatican News
கர்தினால் பெர்னாண்டோ பிலோனி, மற்றும், கொழும்பு பேராயர், கர்தினால் மால்கம் இரஞ்சித் - ucanews.com photo கர்தினால் பெர்னாண்டோ பிலோனி, மற்றும், கொழும்பு பேராயர், கர்தினால் மால்கம் இரஞ்சித் - ucanews.com photo 

இலங்கையில் பயணம் மேற்கொண்டுள்ள கர்தினால் பிலோனி

இலங்கை தாக்குதல்களில் உயிரழந்தோரின் குடும்பங்களுக்கு திருத்தந்தையின் அனுதாபங்களையும், செபங்களையும் நேரில் தெரிவித்தார், கர்தினால் பிலோனி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நற்செய்தி அறிவிப்பு பேராயத்தின் தலைவர், கர்தினால் பெர்னாண்டோ பிலோனி அவர்கள், மே 22, இப்புதன் முதல், இலங்கையில், மூன்று நாள் மேய்ப்புப்பணி பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

மே 16, கடந்த வியாழன் முதல், தாய்லாந்து நாட்டில் மேற்கொண்ட மேய்ப்புப்பணி பயணத்தை நிறைவுசெய்த கர்தினால் பிலோனி அவர்கள், இலங்கை தலைநகர் கொழும்புவை, மே 22, இப்புதனன்று சென்றடைந்தார்.

மே 22, புதன் காலை, கொழும்புவின் புனித அந்தோனியார் திருத்தல மறுசீரமைப்பு பணிகளுக்கும், அங்குள்ள அன்னதான நிலையத்திற்கும், கொழும்பு பேராயர், கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் அடிக்கல் நாட்டிய விழாவில், கர்தினால் பிலோனி அவர்கள் கலந்துகொண்டார்.

அவ்வேளையில், புனித அந்தோனியார் ஆலயத்தில் உயிரிழந்த பலரது உறவினர்களைச் சந்தித்த கர்தினால் பிலோனி அவர்கள், உயிர்ப்பு ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய 'Urbi et Orbi' சிறப்புச் செய்தியில், இலங்கை மக்களை நினைவுகூர்ந்ததை எடுத்துரைத்து, அக்குடும்பங்களுக்கு திருத்தந்தையின் அனுதாபங்களையும், செபங்களையும் தெரிவித்தார்.

மே 23, இவ்வியாழனன்று, நீர்க்கொழும்பு, புனித செபஸ்தியார் ஆயலத்திற்குச் சென்ற கர்தினால் பிலோனி அவர்கள், அக்கோவில் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, அப்பகுதியின் கல்லறையில் கட்டப்படவிருக்கும் ஒரு சிற்றாலயத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவிலும் கலந்துகொண்டார்.

மே 24, இவ்வெள்ளியன்று, கர்தினால் பிலோனி அவர்கள், இலங்கையின் அரசு, மற்றும் சமுதாயத் தலைவர்களைச் சந்திப்பதுடன், கொழும்பு உயர் மறைமாவட்ட அருள் பணியாளர்களையும், துறவியரையும் சந்திக்கிறார்.

இதற்கிடையே, ஏப்ரல் 21, உயிர்ப்பு ஞாயிறன்று இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் முப்பது நாள் நிறைவையொட்டி, மே 21, இச்செவ்வாயன்று, இறந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம், இலங்கை மக்கள், பல்வேறு ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொண்டனர்.

23 May 2019, 14:30