தேடுதல்

Vatican News
கர்தினால் பெர்னாண்டோ பிலோனி கர்தினால் பெர்னாண்டோ பிலோனி  

வேதியர்களுக்குப் பயிற்சி, சிறப்பு மறைபரப்பு மாதம்

மறைப்பரப்புப் பணிக்கு, குறிப்பிட்ட துறவு சபைகளை மட்டும் நியமனம் செய்யாமல், அதற்கு, உலகளாவியத் திருஅவையும், தலத்திருஅவைகளும் பொறுப்பேற்க வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

வருகிற அக்டோபர் மாதம் சிறப்பு மறைபரப்பு மாதமாகச் சிறப்பிக்கப்படுவது, மறைப்பணித்தளங்களில் வேதியர்களுக்குப் பயிற்சியளிப்பது, செபங்களின் புதியமுறைகளைப் புரிந்துகொள்தல், மறைப்பணியை வழிநடத்துதல், மறைப்பணிக்கு நிதி சேர்த்தல் போன்ற தலைப்புக்களில், பாப்பிறை மறைப்பணிக் கழகங்களின் பொது அமர்வில், கர்தினால் பெர்னாண்டோ பிலோனி அவர்கள் உரையாற்றினார்.

உரோம் நகரில் நடைபெற்றுவரும் இந்தப் பொது அமர்வில், மே 27, இத்திங்கள் மாலையில், நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவரும், பாப்பிறை மறைப்பணிக் கழகங்களின் தலைவருமான கர்தினால் பிலோனி அவர்கள், இவ்வாறு உரையாற்றினார்.

திருஅவையின் நற்செய்திப் பணிக்கு உயிரூட்டம் அளித்த, திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்களின், Maximum Illud எனப்படும் திருத்தூது அறிவுரை மடலின் முக்கியத்துவம் பற்றி உரையாற்றிய கர்தினால் பிலோனி அவர்கள், இந்த மடலின் நூற்றாண்டு சிறப்பிக்கப்படும் இவ்வாண்டில், ஒரு சிறப்பு மறைபரப்பு மாதத்தைக் கொண்டாட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விரும்பினார் என்றும் கூறினார். 

Maximum Illud மடலில், திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ள மூன்று முக்கிய கருத்துக்கள் பற்றியும் கர்தினால் பிலோனி அவர்கள் உரையாற்றினார்.

முதலாவது, மறைப்பரப்புப் பணிக்கு, குறிப்பிட்ட துறவு நிறுவனங்கள் மற்றும் துறவு சபைகளை மட்டும் நியமனம் செய்யாமல், உலகளாவியத் திருஅவையும், தலத்திருஅவைகளும் பொறுப்பேற்க வேண்டும். இரண்டாவதாக, மறைப்பணியை நற்செய்தியின்படி ஆற்றுவதென்பது, நற்செய்தி அறிவித்தல், விசுவாசம் மற்றும் பிறரன்புக்குச் சான்று பகர்தலாகும். மூன்றாவதாக, அக்காலத்தில் மிகவும் வலுவாக இருந்த, ஐரோப்பிய தேசியவாத கருத்தியல்களோடும், காலனி ஆதிக்க ஆர்வத்தோடும், விசுவாசம் மற்றும் அதன் மறைப்பணி ஆற்றப்படக் கூடாது.

மே 27, இத்திங்களன்று தொடங்கிய பாப்பிறை மறைப்பணிக் கழகங்களின் பொது அமர்வு, ஜூன் முதல் நாளன்று நிறைவடையும். (Fides)

28 May 2019, 14:40