தேடுதல்

Vatican News
திருத்தந்தையுடன் பேராயர் ஈவான் யூர்க்கோவிச் திருத்தந்தையுடன் பேராயர் ஈவான் யூர்க்கோவிச்  

எளியோரின் நலப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் மத அமைப்புக்கள்

மருத்துவ உலகில் பல முன்னேற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும், அவை, நாடுகளை விட்டு வெளியேறியுள்ள புலம் பெயர்ந்தோரை முற்றிலும் அடைவதில்லை – திருப்பீடத்தின் வேதனை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அனைவருக்கும் நலவாழ்வை உறுதி செய்தல், குறிப்பாக, குழந்தைப் பருவத்திற்குத் தேவையான நலனை உறுதி செய்தல், ஆகிய கருத்துக்களுக்கு, திருப்பீடம், முழுமையான ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்குகிறது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. அவை கூட்டமொன்றில் உரையாற்றினார்.

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் ஈவான் யூர்க்கோவிச் அவர்கள், மே 22, இப்புதனன்று, அங்கு நடைபெற்ற உலக நலவாழ்வு நிறுவனத்தின் 72வது அமர்வில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

மருத்துவ வசதிகளும், மருந்துகளும் அனைவருக்கும் எளிதாகக் கிடைப்பது குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி வலியுறுத்தி வருவதை, பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

மருத்துவ உலகில் பல முன்னேற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும், அவை, அனைவரையும் அடைவதில்லை, குறிப்பாக, நாடுகளை விட்டு வெளியேறியுள்ள புலம் பெயர்ந்தோரை முற்றிலும் அடைவதில்லை என்ற வேதனை தரும் தகவலைச் சுட்டிக்காட்ட, திருப்பீடம் கடமைப்பட்டுள்ளது என்று, பேராயர் யூர்க்கோவிச் அவர்கள் எடுத்துரைத்தார்.

உலகின் பல நாடுகளில், மருத்துவ வசதிகள் அனைவருக்கும் கிடைப்பதற்குரிய வழிகளை, தனியார் நிறுவனங்கள் மேற்கொண்டு வருவதை, திருப்பீடம், பெரிதும் பாராட்டுகிறது என்றும், இந்நிறுவனங்களின் முயற்சிகளை, அரசுகளும், பன்னாட்டு அமைப்புக்களும் ஊக்குவிக்க வேண்டும் என்றும், பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், தன் உரையில் விண்ணப்பித்தார்.

எளியோர் சார்பில் நலப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் பல்வேறு மத நம்பிக்கை கொண்ட அமைப்புக்களைப்பற்றி சிறப்பாக குறிப்பிட்டுப் பேசிய பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், இவ்வமைப்புக்கள், மக்களின் மத நம்பிக்கையை மாற்றுவதில் எவ்வித கவனமும் செலுத்தாமல் மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்து வருவதைப் பாராட்டினார்.

23 May 2019, 14:36