பாப்பிறை இல்லத்தில் வழங்கப்பட்ட தவக்கால தியான உரை - கோப்புப் படம் பாப்பிறை இல்லத்தில் வழங்கப்பட்ட தவக்கால தியான உரை - கோப்புப் படம் 

'உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்குவாயாக" தியான உரை

நாம் வழங்கும் ஆராதனை இறைவனுக்குத் தேவையானது என்று கூறுவதைவிட, அத்தகைய ஆராதனை வழியே நாம் இறைவன் முன் நம்மையே தாழ்த்துவது, நமக்கு நன்மை விளைவிக்கிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"'உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்குவாயாக" என்ற தலைப்பில், தவக்காலத்தின் 4வது மறையுரையை, பாப்பிறை இல்லத்தின் மறையுரையாளர், கப்பூச்சியன் துறவு சபையைச் சேர்ந்த அருள்பணி Raniero Cantalamessa அவர்கள், ஏப்ரல் 5, இவ்வெள்ளி காலையில் வழங்கினார்.

அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களுக்கும், எகிப்திய சுல்தான் அல் கமில் அவர்களுக்கும் நிகழ்ந்த சந்திப்பின் 8ம் நூற்றாண்டைக் கொண்டாடும் இவ்வேளையில், புனித பிரான்சிஸ் அவர்கள், இஸ்லாமியர் இணைந்து மேற்கொண்ட தொழுகைகள் குறித்து, ஆழ்ந்த, நேர்மறையான வகையில் பாதிக்கப்பட்டார் என்பதை, அருள்பணி Cantalamessa அவர்கள், தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

ஏனைய மதங்களில் இறைவன் அளவற்ற சக்தியாகச் சிந்திக்கப்படும் வேளையில், கிறிஸ்தவர்கள், இறைவனை, அளவற்ற அன்பாகக் கருதி, அவருக்கு வணக்கம் செலுத்துகின்றனர் என்று அருள்பணி Cantalamessa அவர்கள், எடுத்துரைத்தார்.

இறைவன் ஒருவரே ஆராதனைக்கு உரியவர் என்பதையும், அவருக்கு அளிக்கப்படும் ஆராதனையில் நாம் பயன்படுத்தும் உடல் சார்ந்த முயற்சிகள் குறித்தும் அருள்பணி Cantalamessa அவர்கள், பல்வேறு விவிலிய எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிக்கூறினார்.

'வணங்குதல், தொழுதல், ஆராதித்தல்' என்றால் என்ன பொருள் என்பதையும், நற்கருணை ஆராதனையைக் குறித்தும், அருள்பணி Cantalamessa அவர்கள், தன் உரையின் இரு பகுதிகளாக கூறினார்.

நாம் வழங்கும் ஆராதனை இறைவனுக்குத் தேவையானது என்று கூறுவதைவிட, அத்தகைய ஆராதனை வழியே நாம் இறைவன் முன் நம்மையே தாழ்த்துவது, நமக்கு நன்மை விளைவிக்கிறது என்று, தன் தியான உரையில் கூறினார், அருள்பணி Cantalamessa.

நற்கருணைக்கு முன் மேற்கொள்ளப்படும் ஆராதனை, கத்தோலிக்கத் திருஅவை மேற்கொள்ளும் ஒரு சிறப்பான ஆராதனை என்று கூறிய அருள்பணி Cantalamessa அவர்கள், கிறிஸ்தவர்களுக்கு, இறைவார்த்தையும், ஆர்த்தடாக்ஸ் சபையினருக்கு icon என்று சொல்லப்படும் குறியீடுகளும் ஆராதனைக்குரியவை என்பதை விளக்கினார்.

நற்கருணை ஆராதனையில் நாம் மேற்கொள்ளும் மௌனம், நம்மை இன்னும் ஆழப்படுத்தி, இறைவனின் ஆழ்ந்த உண்மைகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது என்பதை, அருள்பணி Cantalamessa அவர்கள், தன் நான்காவது தியான உரையில் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 April 2019, 13:36