தேடுதல்

Vatican News
பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றில் உரை வழங்கும் கர்தினால் பரோலின் - கோப்புப் படம் பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றில் உரை வழங்கும் கர்தினால் பரோலின் - கோப்புப் படம் 

மதச் சுதந்திரத்தைக் காப்பதில் திருப்பீடத்தின் அர்ப்பணம்

மத நம்பிக்கை கொண்டோருக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை அறிந்துகொள்ளவும், அதைத் தடுக்க, பன்னாட்டளவில் கூட்டுறவு முயற்சிகள் மேற்கொள்ளவும் நாம் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றான மத உரிமை, மிகக் கடுமையான முறையில் தாக்கப்பட்டு வருவதை அண்மையக் காலங்களில் நாம் கண்டுவருகிறோம் என்று, திருப்பீடத்தின் உயர் அதிகாரி ஒருவர், பன்னாட்டு கூட்டமொன்றில் கூறினார்.

“அகில உலக மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்க இணைந்து நில்லுங்கள்” என்ற தலைப்பில், ஏப்ரல் 3, இப்புதனன்று, உரோம் நகரின், அமெரிக்கத் தூதரகத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

'மனித குடும்பத்தின் பொதுவான நன்மைக்கு ஆபத்து' என்ற தலைப்பில் கர்தினால் பரோலின் அவர்கள் உரை வழங்கியவேளையில், ஒருவர் விரும்பித் தெரிவு செய்யும் மத நம்பிக்கை, அவரது வாழ்வின், சமுதாய, அரசியல் தளங்களில் தாக்கங்களை உருவாக்குகிறது என்று, கர்தினால் பரோலின் அவர்கள், எடுத்துரைத்தார்.

மத நம்பிக்கை கொண்டோருக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை அறிந்துகொள்ளவும், அதைத் தடுக்க, பன்னாட்டளவில் கூட்டுறவு முயற்சிகள் மேற்கொள்ளவும் நாம் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை, கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

மத நம்பிக்கை கொண்டோருக்கு எதிராக, குறிப்பாக, சிறுபான்மை மதத்தைச் சார்ந்தோருக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் குறித்த விவரங்கள், வெளிவராமல் தடுக்கப்படுவது நாம் சந்திக்கும் பேராபத்து என்று, கர்தினால் பரோலின் அவர்கள் எடுத்துரைத்தார்.

மதச் சுதந்திரத்தைக் காக்க, திருப்பீடம் அர்ப்பண உணர்வுடன் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது என்றும், இந்த அர்ப்பணத்திற்கு அண்மைய எடுத்துக்காட்டாக, பிப்ரவரி மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இஸ்லாமிய மதத் தலைவர், Ahmad Al-Tayyeb அவர்களும் அபு தாபியில் வெளியிட்ட அறிக்கை விளங்குகிறது என்று, கர்தினால் பரோலின் அவர்கள், தன் உரையின் இறுதியில் குறிப்பிட்டார்.

05 April 2019, 13:29