தேடுதல்

Vatican News
பேராயர் பெர்னார்தித்தோ அவுசா பேராயர் பெர்னார்தித்தோ அவுசா  

போர்களில் இடம்பெறும் பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம்

அனைத்து விதமான பாலியல் வன்கொடுமைகளிலிருந்து பெண்கள் பாதுகாக்கப்பட்டு, உலகில் அமைதி மற்றும் பாதுகாப்பைக் காத்து ஊக்குவிப்பதற்கு எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளிலும் பெண்கள் முழுமையாக ஈடுபடுத்தப்பட வேண்டும் - பேராயர் அவுசா

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

“பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு: போர்களில் பாலியல் வன்கொடுமை” என்ற தலைப்பில், நியு யார்க் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில்,  ஏப்ரல் 23, இச்செவ்வாயன்று உரையாற்றினார், திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாக, ஐ.நா.வில் பணியாற்றும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா.

போர்களில் இடம்பெறும் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு எதிரான திருப்பீடத்தின் கண்டனத்தைத் தெரிவித்த பேராயர் அவுசா அவர்கள், அதிர்ச்சி தரும் இத்தகைய குற்றங்கள், போரின் ஆயுதங்களாக ஒருபோதும் பயன்படுத்தப்படக் கூடாது என்றும், பாலியல் வன்கொடுமையால் பிறக்கும் குழந்தைகள், வாழ்வதற்கு உரிமையைக் கொண்டுள்ளனர் என்றும் கூறினார்.

இக்குழந்தைகள், வெட்கத்துக்குரியவர்களாக, புறக்கணிக்கப்பட வேண்டியவர்களாக மற்றும், இகழ்ச்சிக்குரியவர்களாக நோக்கப்படாமல், அவர்கள் அன்புகூரப்பட்டு, ஆதரவளிக்கப்பட வேண்டுமெனவும், பேராயர் அவுசா அவர்கள் வலியுறுத்தினார். போர்களின்போது இடம்பெறும் எல்லா விதமான பாலியல் வன்கொடுமைகள், வெளியில் பேசப்படாமல் இருப்பது குறித்த கண்டனத்தைத் தெரிவித்த பேராயர் அவுசா அவர்கள்,  இக்குற்றங்களைப் புரிவோர், பெரும்பாலும் தண்டனையிலிருந்து விலக்குப் பெறுவதால், பாதிக்கப்பட்டவர்கள், வெளியில் சொல்வதற்கு அஞ்சுகிறார்கள் என்றும் கூறினார்.

26 April 2019, 15:36