தேடுதல்

உயிர்ப்புப் பெருவிழாவையொட்டி, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் மலர் அலங்காரம் உயிர்ப்புப் பெருவிழாவையொட்டி, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் மலர் அலங்காரம் 

வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் மலர்த் தோட்டம்

33வது முறையாக, உயிர்ப்புப் பெருவிழாவுக்கு ஹாலந்து நாடு மலர்களை வழங்கி, அந்நாட்டின் மலர் அலங்காரக் கலைஞர், Paul Deckers என்பவரின் தலைமையில், முப்பது பேர், புனித பேதுரு வளாகத்தில் பூந்தோட்டத்தை அமைத்தனர்.

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

உரோம் நகரெங்கும், குறிப்பாக, வத்திக்கான் புனித பேதுரு வளாகம், புனித பேதுரு பசிலிக்கா பேராலயம் ஆகிய முக்கிய இடங்களில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பன்னாட்டு பக்தர்கள் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா மகிழ்வில் திளைத்திருந்தனர். வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவும், வளாகமும், 55 ஆயிரம் பலவண்ண மலர்கள் மற்றும் செடிகளால், அழகுற அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்த அலங்கரிப்பைக் காண்கையில், வத்திக்கான் புனித பேதுரு வளாகம், ஒரு பெரிய பலவண்ண மலர்தோட்டமாகவே மாறியுள்ளதாகத் தெரிந்தது. திருத்தந்தை திருப்பலி நிறைவேற்றும் பீடத்திற்கு முன்பாக, வெள்ளை, சிவப்பு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில், 25 ஆயிரம் மணிவடிவ மலர்ச்செடிகள், மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தில், ஏழாயிரம் சிவந்திப்பூ போன்ற வடிவமுடைய மலர்கள், மூவாயிரத்திற்கு அதிகமான ரோஜாக்கள், செந்நீல நிறம்கொண்ட ஆறாயிரம் மணிவடிவ மலர்கள் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவை முன்னிட்டு, திருத்தந்தையருக்கு மரியாதை செலுத்தும்வண்ணம், ஹாலந்து நாடு, இந்த மலர்த் தோட்டத்தை, ஒவ்வோர் ஆண்டும் வழங்கி வருகிறது. 33வது முறையாக, 2019ம் ஆண்டு உயிர்ப்புப் பெருவிழாவுக்கு ஹாலந்து நாடு இம்மலர்களை வழங்கி, அந்நாட்டின் மலர் அலங்காரம் செய்யும், Paul Deckers என்பவரின் தலைமையில், முப்பது பேர், இந்த பூந்தோட்டத்தை அமைத்தனர்.

நீல மற்றும் ஆரஞ்சு நிற மலர்கள்

700ம் ஆண்டின் இறுதியில் தென்னாப்ரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்குக் கொண்டுவரப்பட்ட, "சொர்க்கத்தின் பறவை" எனவும் அழைக்கப்படும், ஆரஞ்சு மற்றும் நீல நிற மலர்களும், இலைகளும் கொண்ட செடிகள் முதன்முறையாக, ஏப்ரல் 21, இஞ்ஞாயிறன்று வைக்கப்பட்டிருந்தன. பசிலிக்காவுக்கு முன்புறம், திருத்தந்தை அமரும் பெரிய நாற்காலிக்கு இருபுறமும், அலரி போன்ற சிறு கொம்புகளையுடைய செடிகள் மற்றும் மலர்கள் (birches, willows) உட்பட, 12க்கும் மேற்பட்ட மலர்த் தொட்டிகளும், செடிகளும் வைக்கப்பட்டிருந்தன.

புனித பேதுரு பசிலிக்காவின் பலிபீடத்திற்கு முன்புறத்தை அலங்கரித்திருந்த, ஏறக்குறைய முன்னூறு ஓர்க்கிதே மலர்கள், சுலோவேனிய நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டவை. இம்மலர்கள், ஒரு காலத்தில், ஜப்பானிலிருந்து சுலோவேனியாவிற்கு எடுத்துவரப்பட்டு வளர்க்கப்பட்டவை. கடந்த 15 ஆண்டுகளாக, சுலோவேனியாவிலிருந்து மலர் அலங்காரம் செய்பவர்கள் வந்து, வத்திக்கான் தோட்டப் பணியாளர்களுடன் இணைந்து, பசிலிக்காவில் மலர் அலங்காரத்தை அமைக்கின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 April 2019, 14:28