தேடுதல்

Vatican News
ஐ.நா.அவை கூட்டங்களில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் இவான் யூர்க்கோவிச் ஐ.நா.அவை கூட்டங்களில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் இவான் யூர்க்கோவிச்  

முன்னேற்றத்தின் பயன்கள் அனைவரையும் அடையவேண்டும்

தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மனித சமுதாயத்திலிருந்து விலகிச்சென்று, தன்னிச்சையாக வளர்வது பயனற்றது – திருப்பீடப் பிரதிநிதி பேராயர் யூர்க்கோவிச்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

படைப்பாற்றலையும், புதிய முயற்சிகளையும் ஊக்குவிக்கும்வண்ணம், பதிப்புரிமை, அல்லது, வெளியீட்டுரிமை (Copyright) இருக்கவேண்டுமெனினும், அது, சமுதாயத்தின் பரந்துபட்ட நன்மைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. அவையில் ஆற்றிய உரையில் கூறினார்.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா.அவை கூட்டங்களில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் இவான் யூர்க்கோவிச் அவர்கள், உலக அறிவுசார்ந்த சொத்துக்கள் நிறுவனம், ஏப்ரல் 3ம் தேதி நடத்திய கூட்டத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

கத்தோலிக்கத் திருஅவை, உலகெங்கும் நடத்திவரும் கல்விக்கூடங்களில், கத்தோலிக்கருக்கு மட்டுமல்லாமல், பிற மதத்தவருக்கும் இடமளித்து, அவர்களது படைப்பாற்றலை வெளிக்கொணரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என்று பேராயர் யூர்க்கோவிச் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

மேலும், UNCTAD எனப்படும் வர்த்தகம் மற்றும் முன்னேற்றம் குறித்த ஐ.நா. அவை, ஏப்ரல் 3ம் தேதி ஜெனீவாவில் நடத்திய மற்றொரு கூட்டத்தில் பங்கேற்ற பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், கணனி வர்த்தகம் மற்றும், டிஜிட்டல் பொருளாதாரம் குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மனித சமுதாயத்திலிருந்து விலகிச்சென்று, தன்னிச்சையாக வளர்வது பயனற்றது என்பதை, தன் உரையில் சுட்டிக்காட்டிய பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், ஒவ்வொரு முன்னேற்றமும் மனித சமுதாயத்தின் மீது நேர்மறையான, அல்லது, எதிர்மறையான தாக்கங்களை உருவாக்கி வருகின்றது என்று கூறினார்.

வர்த்தகம், முன்னேற்றம் ஆகியவற்றின் பயன்கள் அனைவரையும் சென்றடையவேண்டும் என்பதில் திருஅவை மிகுந்த தெளிவும், ஆர்வமும் கொண்டுள்ளது என்பதை, பேராயர் யூர்க்கோவிச் அவர்கள் தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

04 April 2019, 15:14