ஐ.நா. கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா ஐ.நா. கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா 

மக்கள்தொகையும், மனித முன்னேற்றமும் குறித்து திருப்பீடம்

உலகில் அதிக வருமானம் பெறும் 20 விழுக்காட்டினர், உலகின் 86 விழுக்காடு வளங்களைப் பயன்படுத்துகையில், மிக வறிய 20 விழுக்காட்டினர், 1.3 விழுக்காடு வளங்களையே பயன்படுத்துகின்றனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மக்கள்தொகைக்கும், முன்னேற்றத்திற்கும் உள்ள தொடர்பை புரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்ட பன்னாட்டு கருத்தரங்கு, கெய்ரோ நகரில் நடைபெற்றதன் 25ம் ஆண்டை நினைவுகூரும் வேளையில், மனிதர்களின் ஒருங்கிணைந்த முன்னேற்றம் குறித்து உலக அரங்கத்தில் இன்னும் தெளிவு பிறக்கவில்லை என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், பன்னாட்டு கருத்தரங்கில் வருத்தம் தெரிவித்தார்.

நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், மக்கள் தொகை மற்றும் முன்னேற்ற குழுவின் 52வது அமர்வில், இவ்வியாழனன்று உரையாற்றுகையில், இவ்வாறு கூறினார்.

நிலையான திருமண உறவினால் உருவாக்கப்படும் குடும்பமே மனித சமுதாயத்தின் அடிப்படைக் கூறு என்பதையும், குடும்பத்தில் இருப்பவர், குறிப்பாக பெண்கள் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதையும் உலக அரங்குகளில் திருப்பீடம் கூறிவருகிறது என்று, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

மக்கள்தொகை மற்றும் முன்னேற்ற குழு, முன்னேற்றத்தையும், மக்களின் குடிபெயர்தலையும் இணைத்து கூறியுள்ள கருத்துக்களை உலக அவைகள் இன்னும் தீவிரமாக ஆய்வு செய்து, தகுந்த செயல் திட்டங்களை மேற்கொள்ளவேண்டும் என்று பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் பரிந்துரை செய்தார்.

உலக வளங்களைப் பயன்படுத்துவதில் நிலவும் அநீதமான ஏற்றத்தாழ்வுகள் குறித்துப் பேசிய பெரியார் அவுசா அவர்கள், உலகில் அதிக வருமானம் பெறும் 20 விழுக்காட்டினர், உலகின் 86 விழுக்காடு வளங்களைப் பயன்படுத்துகையில், மிக வறிய 20 விழுக்காட்டினர், 1.3 விழுக்காடு வளங்களையே பயன்படுத்துகின்றனர் என்று சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 April 2019, 13:42