தேடுதல்

Vatican News
திருத்தந்தை, அருள்பணி Arellano, FAOவில் சந்திப்பு திருத்தந்தை, அருள்பணி Arellano, FAOவில் சந்திப்பு  

வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கு முக்கியக் கருவிகள், பெண்கள்

"உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ, மற்றும் ஏனைய மதங்களை சேர்ந்த பெண்களே, இவ்வுலகின் அமைதியைப் பாதுகாப்பது, உங்கள் கரங்களில் உள்ளது." – புனிதத் திருத்தந்தை 6ம் பவுல்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பெண்கள், குறிப்பாக, கிராமங்களில் உழைக்கும் அன்னையர், அவர்கள் வாழும் சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், அதன் வழியே, வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கும் முக்கியமான கருவிகளாக அமைகின்றனர் என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், பன்னாட்டு கருத்தரங்கில் உரையாற்றினார்.

உரோம் நகரில் உள்ள FAO என்றழைக்கப்படும் உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் தலைமைச் செயலகத்தில், "பாலங்கள், சுவர்கள் அல்ல - வாழ்வுக்கும் பணிக்கும் இடையே பெண்கள்" என்ற தலைப்பில், மார்ச் 13, இப்புதனன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு பன்னாட்டு கருத்தரங்கில், திருப்பீடப் பிரதிநிதியாகப் பங்கேற்ற, அருள்பணி Fernando Chica Arellano அவர்கள், உலக முன்னேற்றத்தில் பெண்கள் ஆற்றும் முக்கியப் பணியைக் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

தன் உரையின் துவக்கத்தில், பெண்களைக் குறித்து, குறிப்பாக அன்னையரைக் குறித்து, புனித திருத்தந்தை 6ம் பவுல், மற்றும், திருத்தந்தை பிரான்சிஸ் ஆகிய இருவரும் பகிர்ந்துகொண்ட கூற்றுகளை, அருள்பணி Arellano அவர்கள், மேற்கோளாகக் கூறினார்.

இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் இறுதியில், திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் வழங்கிய ஒரு செய்தியில், "உலகெங்கும் வாழும், கிறிஸ்தவ, மற்றும் ஏனைய மதங்களை சேர்ந்த பெண்களே, இவ்வுலகின் அமைதியைப் பாதுகாப்பது, உங்கள் கரங்களில் உள்ளது" என்று கூறிய சொற்களை, அருள்பணி Arellano அவர்கள், குறிப்பிட்டார்.

"தாய்மைக்குரிய கண்ணோட்டம் இன்றி, இவ்வுலகின் எதிர்காலத்தைப் பார்க்கும்போது, அதில், கிட்டப்பார்வையே அதிகமாக இருக்கும். அத்தகைய உலகம் என்ற இல்லத்தில் அனைவரும் கூடி வருவோமே தவிர, அங்கு உடன்பிறந்த உணர்விருக்காது. ஏனெனில், மனித குடும்பம், அன்னையரை அடித்தளமாகக் கொண்டது" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 1, இறைவனின் அன்னை மரியாவின் திருநாளன்று கூறிய கருத்துக்களை, அருள்பணி Arellano அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

வறுமைப்பட்ட நாடுகளில், குறிப்பாக, சஹாராவின் மிகப் பிற்படுத்தப்பட்ட பகுதிகளில், வயல்வெளிகளில் பணியாற்றுவது, 60 முதல், 70 விழுக்காட்டு பெண்கள், குறிப்பாக அன்னையர் என்பதை தன் உரையில் எடுத்துரைத்த அருள்பணி Arellano அவர்கள், கடினமான உழைப்பை வழங்கும் இப்பெண்கள், அப்பகுதியின் பொருளாதாரம், முன்னேற்றம் ஆகியவை குறித்த முடிவுகள் எடுக்கும் கூட்டங்களில் பங்கேற்பதில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

தூக்கியெறியும் கலாச்சாரம் பெருகியுள்ள இன்றைய உலகில், கிராமங்களில் வாழ்வோர், குறிப்பாக, பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பதை குறிப்பிட்டுப் பேசிய அருள்பணி Arellano அவர்கள், இத்தகையதொரு சூழலில், இப்பெண்கள், மனித வர்த்தகத்திற்கும், நவீன அடிமைத்தனத்திற்கும் உள்ளாக்கப்படுகின்றனர் என்று எடுத்துரைத்தார்.

14 March 2019, 15:50