தேடுதல்

Vatican News
பேராயர் பெர்னார்தித்தோ அவுசா பேராயர் பெர்னார்தித்தோ அவுசா  

மண்ணின் மைந்தர்கள் சார்பில் திருஅவையின் பணி

மண்ணின் மைந்தர்கள் சார்பில் குரல் எழுப்பி வரும் அனைத்து உலக அமைப்புக்களோடும் கத்தோலிக்கத் திருஅவை இணைந்து குரல் எழுப்பி வருகிறது - பேராயர் அவுசா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

'ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலியல்' என்று பேசும்போது, கத்தோலிக்க திருஅவை, இந்த பூமிக்கோளத்தை மட்டும் மையப்படுத்தி பேசுவதில்லை, மாறாக, அங்கு வாழும் மக்களை, அதாவது, பூமி என்ற நம் பொதுவான இல்லத்தில் நம்மோடு வாழ்வோர் அனைவரையும் மையப்படுத்தி பேசுகிறது என்று, திருப்பீட உயர் அதிகாரி பன்னாட்டு கருத்தரங்கில் உரையாற்றினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்க்டன் நகரில் அமைந்துள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக் கழகத்தில், "ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலியல் - நம் பொதுவான இல்லத்தைப் பேணுவதில், அமேசான் பகுதியிலிருந்து பதிலிறுப்பு" என்ற தலைப்பில், மார்ச் 19, இச்செவ்வாய் முதல், நடைபெறும் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில், ஐ.நா. அவையின் திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள் வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

"மண்ணின் மைந்தர்கள் சார்பில் திருஅவையின் பணி" என்ற தலைப்பில் உரை வழங்கிய பேராயர் அவுசா அவர்கள், இந்த பூமிக்கோளமும் மனிதர்களும் சந்திக்கும் பிரச்சனைகள் இருவேறு பிரச்சனைகள் அல்ல, மாறாக, அவை ஒரே பிரச்சனையின் இரு முகங்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 'இறைவா உமக்கே புகழ்' என்ற தன் திருமடலில் கூறியுள்ளதை, தன் உரையின் துவக்கத்தில் சுட்டிக்காட்டினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், மண்ணின் மைந்தர்களும் என்ற தலைப்பில் தன் உரையின் முதல் பகுதியில் பேசிய பேராயர் அவுசா அவர்கள், பழங்குடியின மக்கள் சார்பில் திருத்தந்தை உலக அவைகளில் எழுப்பி வரும் கருத்துக்களை தொகுத்து வழங்கினார்.

ஐ.நா. அவையில் பழங்குடியினர் குறித்து எழுப்பப்பட்டு வரும் அக்கறைகளை, அடுத்த பகுதியில் வலியுறுத்திக் கூறிய பேராயர் அவுசா அவர்கள், மண்ணின் மைந்தர்கள் சார்பில் குரல் எழுப்பி வரும் அனைத்து உலக அமைப்புக்களோடும் கத்தோலிக்கத் திருஅவை இணைந்து குரல் எழுப்பி வருகிறது என்பதை எடுத்துரைத்தார்.

இயற்கையைக் காக்கும் முயற்சிகளில், அந்த இயற்கையோடு இணைந்து வாழும் மக்களைக் குறித்து கவலையின்றி, அவர்களை இயற்கையிலிருந்து பிரிக்கும் ஆபத்து குறித்து தனிப்பட்ட முறையில் பேசிய பேராயர் அவுசா அவர்கள், இந்தப் பிரச்சனையில், அமேசான் பகுதியில் வாழ்வோர் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை வலியுறுத்திக் கூறினார்.

"ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலியல் - நம் பொதுவான இல்லத்தைப் பேணுவதில், அமேசான் பகுதியிலிருந்து பதிலிறுப்பு" என்ற தலைப்பில், அமேசான் மக்களை மையப்படுத்தி நடைபெற்றுவரும் இந்த பன்னாட்டு கருத்தரங்கை, அமேசான் ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தை ஏற்பாடு செய்யும் திருப்பீட அமைப்பும், ஜார்ஜ்டவுன் பல்கலைக் கழகமும் இணைந்து நடத்துகின்றன.

20 March 2019, 15:25